இமானுவேல்சேகரன் நினைவு நாளையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 12 இடங்களில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு உள்ளது. ரெயில் நிலையங்களிலும் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில் வாகனன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி
இருப்பதாவது:–
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நாளை (11–ந்தேதி) இமானுவேல் சேகரன் நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள செல்பவர்கள் சொந்த வாகனங்களில் மட்டுமே செல்ல வேண்டும். அவ்வாறு செல்பவர்கள் தங்களது எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் முன்கூட்டியே வாகன அனுமதி சீட்டு பெற்று செல்ல வேண்டும்.
இமானுவேல்சேகரன் நினைவு நாளை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் 12 இடங்களில் வாகன சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர சோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. அனைத்து சோதனை சாவடிகளிலும் காவல்துறை மற்றும் போக்குவரத்து துறையினர் இணைந்து கம்ப்யூட்டர் மூலம் ஒவ்வொரு வாகனமும் வாகன எண், உரிமையாளர் மற்றும் முகவரி ஆகியவை தணிக்கை செய்யப்படும்.
தவறான வாகன எண் அல்லது வாடகை வாகனத்தை சொந்த வாகனமாக பயன்படுத்துதல் மற்றும் முறையாக அனுமதி பெறப்படாத வாகனத்தின் உரிமையாளர் மற்றும் ஓட்டுநர் மீது சோதனை சாவடியிலேயே சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இந்த ஏற்பாடானது ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டுமல்லாது அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.
விழாவில் கலந்து கொள்வதற்காக வரக்கூடிய முக்கிய தலைவர்களின் வாகனத்துடன் 3 வாகனங்கள் மட்டுமே உடன் வர அனுமதிக்கப்படும். மேலும் ஏதேனும் பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தால் சம்பந்தப்பட்டவர்களிடமே சேத தொகையினை வசூலிக்க நடவடிக்கை மேற்கொள்ளப் படும்.
இமானுவேல்சேகரன் நினைவு நாள் நிகழ்ச்சியில் இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் ஆகியவற்றில் வந்து கலந்துகொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு தடையை மீறி இருசக்கர வாகனம் மற்றும் ஆட்டோக்களில் வருபவர்களது வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன் சம்பந்தப்பட்ட வாகன ஓட்டுனர் மற்றும் உரிமையாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மாவட்டம் முழுவதும் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பரமக்குடியில் மட்டும் 9 இடங்களில் காமிரா அமைக்கப்பட்டுள்ளது. மணிநகர், பொன்னையாபுரம், சந்தைபேட்டை, வைகை நகர் ஆகிய இடங்களில் அஞ்சலி செலுத்த வருபவர்களின் வாகனங்கள் நிறுத்தப்படும். அதன் பின்னர் அவர்கள் நடந்து சென்று நினைவு இடத்தில் அஞ்சலி செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ரெயில் நிலையங்கள், ரெயில்வே கேட் போன்ற இடங்களில் ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
ரெயில்வே டி.ஐ.ஜி. பாஸ்கரன் உத்தரவின் பேரில் ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு சம்பத்குமார், டி.எஸ்.பி. வெள்ளையன், கண்ணன், 6 இன்ஸ்பெக்டர்கள், 27 சப்–இன்ஸ்பெக்டர்கள், போலீசார் 200 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ரெயில்வே பாதுகாப்பு படை ஐ.ஜி. தாக்கா உத்தரவின் பேரில் மதுரை ரெயில்வே கோட்ட பாதுகாப்பு படை ஆணையர் சுகுமாறன், உதவி கோட்ட ஆணையர் செல்வராஜ், 3 இன்ஸ்பெக்டர்கள், 15 சப்–இன்ஸ்பெக்டர்கள், 80 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
பரமக்குடி, கமுதக்குடி, சத்திரக்குடி, ராமநாதபுரம் ஆகிய ரெயில் நிலையங்களில் கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். ஒவ்வொரு ரெயிலிலும் 6 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
-DINAVIDIYAL!