ராமநாதபுரம் மாவட்டம் மணக்குடி, சிவகங்கை மாவட்டம் திருமணவயல் ஆகிய கிராமங்களை சேர்ந்த 8 பேர் காரில் நெல்லை மாவட்டம் தென்காசி அருகே நடைபெற்ற திருமண விழாவுக்கு நேற்று சென்றனர்.
திருமணம் முடிந்ததும் நேற்று இரவு 11 மணிக்கு காரில் ஊர் திரும்பினர். காரை மணக்குடியை
சேர்ந்த குணசேகரன் (வயது30) என்பவர் காரை ஓட்டி வந்தார்.
இன்று அதிகாலை 4 மணி அளவில் கார் காளையார் கோவில் அருகே உள்ள ஜெப தோட்டம் பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது கார் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.
தாறுமாறாக ஓடிய கார் சாலையோரத்தில் உள்ள புளிய மரத்தில் மோதி கவிழ்ந்தது. உள்ளே இருந்தவர்கள் கூச்சல் போட்டு அலறினர். கார் மரத்தில் மோதியதில் முன் பகுதி பலத்த சேதம் அடைந்தது.
இந்த விபத்தில் மணக்குடியை சேர்ந்த தியானேஸ்வரன் (25), ரமேஷ்(27), திருமணவயலை சேர்ந்த மலைவேந்தன்(32) ஆகியோர் அதே இடத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.
மேலும் இந்த விபத்தில் கார் டிரைவர் குணசேகரன், நவின் (25), பால்ராஜ் (23), விஜயராஜ், உதயராஜ் (19) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
விபத்து பற்றி தகவல் அறிந்ததும் காளையார் கோவில் போலீசார் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்தில் காயம் அடைந்த 5 பேரையும் உடனடியாக மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.-DINAVIDIYAL!