சென்னை,
7 ஆயிரம் பாடல்களுக்கு மேல் எழுதிய கவிஞர் வைரமுத்துவுக்கு அடுத்த மாதம் (அக்டோபர்) 14-ந் தேதி, சென்னையில் பாராட்டு விழா நடக்கிறது.
கவிஞர் வைரமுத்து 1980-ம் ஆண்டு வெளிவந்த நிழல்கள் படத்துக்காக, பொன்மாலைப்பொழுது... என்ற பாடலை முதன்முதலாக எழுதினார். இதுவரை அவர், 7 ஆயிரம் பாடல்களுக்கு மேல் எழுதியிருக்கிறார். இதுவரை அவர் 6 தேசிய விருதுகளையும், 6 தமிழக அரசின் விருதுகளையும் வாங்கியிருக்கிறார். தமிழக அரசின் கலைமாமணி விருதும் பெற்றுள்ளார்.அவர் எழுதி விரைவில் திரைக்கு வர இருக்கும் படங்களில் ஒன்று, கங்காரு. இதில் புதுமுகம் அர்ஜுனா கதாநாயகனாகவும், வர்ஷா அஸ்வதி கதாநாயகியாகவும் நடித்து இருக்கிறார்கள். சாமி டைரக்டு செய்திருக்கிறார். சுரேஷ் காமாட்சி தயாரித்து இருக்கிறார்.பின்னணி பாடகர் சீனிவாஸ் இசையமைத்து இருக்கிறார். அவர் இசையமைத்துள்ள முதல் படம் இது.
பாராட்டு விழா
இந்த படத்தில் இடம்பெறும் 6 பாடல்களையும் கவிஞர் வைரமுத்துவே எழுதியிருக்கிறார். படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவை, வைரமுத்துவுக்கு பாராட்டு விழாவாக நடத்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஏற்பாடு செய்து இருக்கிறார்.அதன்படி, இந்த விழா அடுத்த மாதம் (அக்டோபர்) 14-ந் தேதி, சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடக்கிறது. விழாவில், தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்-நடிகைகள், டைரக்டர்கள், இசையமைப்பாளர்கள், பின்னணி பாடகர்-பாடகிகள் கலந்து கொள்கிறார்கள்.கவிஞர் வைரமுத்துவை பற்றிய ஒரு டிரைலர் மற்றும் அவர் எழுதி மிக பிரபலமான 10 பாடல் காட்சிகள், விழாவில் திரையிடப்படுகிறது.-DINAVIDIYAL!