HAPPY PONGAL WISHES

WELCOME TO DINAVIDIYAL...fast online tamil news network...

Thursday, 5 September 2013

விமான பணிப்பெண் தற்கொலை வழக்கு: ஓராண்டு சிறைவாசத்துக்கு பிறகு கோபால் கண்டாவுக்கு ஜாமின்

புதுடெல்லி, செப். 5-

விமான பணிப்பெண் கீதிகா சர்மா தற்கொலை வழக்கில் அரியானா மாநில முன்னாள் மந்திரி கோபால் கண்டா மற்றும் அவரது உதவியாளர் கீதிகா சர்மா ஆகியோர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

அவர்கள் மீதான விசாரணை முடிவடைந்த நிலையில் கோபால் கண்டா, அவரது உதவியாளர் அருணா சத்தா ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. தற்கொலைக்கு தூண்டியது, குற்றச்செயல்களில் ஈடுபட்டது, ஆதாரங்களை அழித்தது உள்ளிட்ட 6 பிரிவுகளில் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசாரின் எதிர்ப்பு காரணமாக கோபால் கண்டாவின் ஜாமின் மனு நிராகரிக்கப்பட்டது. 

இந்நிலையில், டெல்லி கோர்ட்டில் கோபால் கண்டா சார்பில் மீண்டும் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், சிர்சா தொகுதி எம்.எல்.ஏ.வான கோபால் கண்டா, அரியானா மாநில சட்டசபைக் கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக அவருக்கு ஜாமின் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, அரசியல் செல்வாக்கு உள்ள கோபால் கண்டா வெளியில் வந்தால் ஆதாரங்களை அழித்து விடுவார் என்பதால் அவருக்கு ஜாமின் வழங்கக்கூடாது என்று காவல்துறை எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால், விசாரணை முடிந்துவிட்டதால், காவல்துறை கவலைப்படுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்று கோபால் கண்டாவின் வழக்கறிஞர் வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக கோபால் கண்டாவுக்கு ஒரு மாதம் ஜாமின் வழங்கி தீர்ப்பளித்தார். மேலும் ரூ.5 லட்சம் ரொக்கம் செலுத்தி ஜாமின் பெற்றுக்கொள்ளலாம் என்று கூறிய நீதிபதி, வெளிநாட்டு பயணத்துக்கு தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்தார்.-DINAVIDIYAL!