சென்னை, செப். 5–
அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் கருத்துக்களை இணைய தளம் மூலம் தெரிவித்து வருகிறார்கள்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி டுவிட்டரிலும், பேஸ்புக் மூலமும் தனது கருத்துக்களை தெரிவித்து வருகிறார். அரசியல் உள்பட பல்வேறு விதமான கேள்விகளுக்கும் அவர் பதில் அளிக்கிறார்.
‘பேஸ்புக்’கில் அரசியல் தொடர்பாக அவர் தெரிவிக்கும் கேள்வி–பதில்கள், அறிக்கைகள் இடம் பெறுகின்றன. டுவிட்டரில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளித்து வருகிறார்.
அரசியல் குறித்து டுவிட்டரில் சமீபத்தில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி அளித்துள்ள பதிலில், அண்ணாவின் பிறந்த நாள் தான் தன்னால் மறக்க முடியாத நாள் என்று கூறியுள்ளார். இளைஞர்களுக்கு தாங்கள் கூறும் அறிவுரை என்ன என்ற கேள்விக்கு தி.மு.க. இளைஞர் அணிக்காக தான் எழுதிய நூலில் அது வரிசையாக இடம் பெற்றுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
வடமாநிலங்களில் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர்களை அரசியல் கட்சிகள் முன் கூட்டியே அறிவிக்கின்றன. நீங்களும் அதுபோல பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களை முன்னதாகவே அறிவிப்பீர்களா? என்று கேட்கப்பட கேள்விக்கு அதுபற்றி யோசிக்கப்படும் என்று கருணாநிதி பதில் அளித்துள்ளார்.
நீங்கள் ஆட்சிக்கு வந்திருந்தால் மின்வெட்டு பிரச்சினையை தீர்த்து இருப்பீர்களா? என்ற கேள்விக்கு ஆட்சிக்கே வரவிடாமல் செய்துவிட்டு இப்படி கேட்பது வேடிக்கையாக இல்லையா என்று கூறியுள்ளார்.
உங்களுக்கு பிடித்தமான கிரிக்கெட் வீரர் யார்? என்று டுவிட்டரில் கேட்கப்பட்ட கேள்விக்கு, ‘முன்பு கபில் தேவ் ரசிகராக இருந்தேன். இப்போது டோனி தான் என் அபிமான கிரிக்கெட் வீரர்’ என்று கருணாநிதி பதில் அளித்துள்ளார்.-DINAVIDIYAL!