HAPPY PONGAL WISHES

WELCOME TO DINAVIDIYAL...fast online tamil news network...

Monday, 9 September 2013

தமிழை ஏன் இன்னும் கெளரவிக்கவில்லை மத்திய அரசு.. ராஜ்யசபாவில் சீறிய இந்தி எம்.பி.!

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் சிலரே தமிழின் பெருமையை மதிக்காமல் இருக்கும் நிலையில் இந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட, அதுவும் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி. ஒருவர் தமிழை நாட்டின் 2வது தேசிய மொழியாக அறிவிக்க வேண்டும், நாடு முழுவதும் தமிழை ஒரு கட்டாயப் பாடமாக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் முழங்கியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்தக் கோரிக்கையுடன் நில்லாமல் தமிழின் பெருமைகளையும் அவர் விளக்கி விரிவாகப் பேசியதும் தமிழர்களை பெரும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது. அந்த சிறப்புமிகு எம்.பியின் பெயர் தருண் விஜய். பாஜகவைச் சேர்ந்தவர். உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர். இவரது பேச்சால் திமுக தலைவர் கருணாநிதியே வியந்து போய் உடனடியாக அந்த எம்.பியைப் பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
                   ராஜ்யசபாவில்தான் இந்த ஆச்சரியம் நடந்தது. உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி தருண் விஜய், தமிழின் பெருமைகளை விளக்கிப் பேசப் பேச அத்தனை பேரும் - குறிப்பாக தமிழகத்து எம்.பிக்கள் வாயடைத்துப் போய்ப் பார்த்துக் கொண்டிருந்தனர். முன்னதாக தனது பேச்சைத் தொடங்கியபோது தமிழகத்து எம்.பிக்களைப் பார்த்து வணக்கம் என்று சொல்லி விட்டு பேச்சைத் தொடங்கினார் தருண் விஜய். தருண் விஜய் பேசுகையில், வடக்கில் உள்ள எனது சகாக்கள் சிலரின் அடக்குமுறை, அராஜகம் மற்றும் பிடிவாதப் போக்கினால், உலகின் மிகச் சிறந்த மொழிகளில் ஒன்றான தமிழின் பெருமைகளை இந்தி பேசும் மக்களால் புரிந்து கொள்ளவே முடியாமல் போனது துரதிர்ஷ்டவசமானது. ஏழு கடல்களையும் தாண்டிய பெருமை படைத்தது தமிழ் மொழி மட்டும்தான். அதன் தாக்கத்தை உலகம் முழுவதும் காணலாம். செம்மொழியான தமிழ் அத்தனை உச்சங்களையும் கொண்டுள்ள தனிப்பெரும் மொழி. காலங்கள் பலவற்றைத் தாண்டியும் இன்னும் சிறப்பாக உள்ள ஒரே மொழி தமிழ் மட்டும்தான். தமிழ் மொழியை கெளரவப்படுத்தும் வகையில் அனைத்து மாநிலங்களிலும் உயர் கல்விநிறுவனங்களில் சிறப்பு இருக்கைகளை மத்திய அரசு ஏற்படுத்த வேண்டும். தமிழில் சிறப்பு பெறுவோருக்கு சிறப்பு பதவி உயர்வுகளை வழங்க வேண்டும். அதேபோல அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும் தமிழுக்கு தனியாக இருக்கைகளை அமைக்க வேண்டும். அதேபோல அனைத்து வட இந்தியப் பள்ளி, கல்லூரிகளில் தமிழைப் பரப்ப மத்திய அரசு விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக திட்டமிட வேண்டும். கடந்த காலங்களில் தமிழ்ப் புலவர்கள், தமிழறிஞர்கள் வட இந்திய புனிதத் தலங்களான கேதார்நாத் உள்ளிட்டவற்றுக்கு அதிகம் வந்துள்ளனர். மேலும் வட இந்திய, தென்னிந்தியா இடையே நல்லுறவும் இருந்துள்ளது. தேசியக் கவிஞராகப் போற்றப்படும் பாரதியார்தான் உண்மையிலேயே தேசிய ஒற்றுமையின் தலை சிறந்த அடையாளம். வட இந்தியர்களின் டர்பன் அணிந்து, கலாச்சாரம் மற்றும் தேசிய ஒற்றுமையின் மிகச் சிறந்த உதாரணமாக திகழ்ந்தவர் பாரதியார். தமிழ் மொழிக்கு மிகச் சிறந்த பெருமைகள் உள்ளன. ஆனால் அந்தத் தகுதிக்குரிய கெளரவத்தையும், மதிப்பையும் நாம் கொடுத்திருக்கிறோமா என்ற கேள்விக்கு இங்கு யாரிடமும் பதில் இல்லை என்று வருத்தத்துடன் முடித்தார் தருண் விஜய்.

           தருண் விஜய் பேசி முடித்ததும், தேன் மழை பொழிந்து நின்றது போல இருந்தது. அவரது பேச்சைக் கேட்டு மெய் மறந்து போயிருந்த தமிழகத்தைச் சேர்ந்த எம்.பிக்கள் நடப்பது கனவா, நனவா என்றே தெரியாமல் விய்ந்து போய் அமர்ந்திருந்தனர். பின்னர் ஒட்டுமொத்தமாக அத்தனை பேரும் மேசைகளைத் தட்டி தருண் விஜய்யைப் பாராட்டினர். 
            தருண் விஜய், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பத்திரிக்கையான பாஞ்சசன்யாவின் முன்னாள் ஆசிரியர் ஆவார். பாஜகவின் செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரும் ஆவார். 
                                                                                                                                      -DINAVIDIYAL!