HAPPY PONGAL WISHES

WELCOME TO DINAVIDIYAL...fast online tamil news network...

Monday, 26 March 2012

10-ம் வகுப்பு கணிதத் தேர்வு: கலக்கத்தில் மாணவர்கள்

சேலம், மார்ச் 25: பத்தாம் வகுப்பு கணிதத் தேர்வுக்கு புத்தகத்துக்கு வெளியே இருந்து 12 மதிப்பெண்கள் கொண்ட 7 வினாக்கள் கேட்கப்படும் என்பதால், முழு மதிப்பெண் (100க்கு 100) பெற முடியுமா என்ற ஏக்கத்தில் நகர்ப்புற மாணவர்களும், தேர்ச்சி பெற முடியுமா என்ற கலக்கத்தில் கிராமப்புற மாணவர்களும் உள்ளனர்.
சமச்சீர் கல்வி பிரச்னைகள் ஒரு வழியாக முடிவுக்கு வந்த பிறகு 2011 ஆகஸ்ட் இறுதியில் தமிழகத்தில் உள்ள 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டன. புத்தகம் கிடைத்து 7 மாதங்கள் முடிவடைந்துள்ள நிலையில், தமிழகம் முழுவதும் சுமார் 11.50 லட்சம் மாணவ-மாணவிகள் ஏப்ரல் 4-ம் தேதி முதல் பொதுத் தேர்வை எழுத உள்ளனர்.
சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களை ஆய்வு செய்த மூத்த ஆசிரியர்கள், கணித பாடத் திட்டம் கடினமாக இருப்பதாக முதலிலேயே தெரிவித்துள்ளனர். சமச்சீர் பாடத்திட்ட கணித பாடத்தில் புதிய கருத்துகள், புதிய தலைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அவை கிராமப்புற மாணவர்களால் புரிந்து கொள்ள இயலாத வகையில் உள்ளன.
குழப்பத்தில் ஆழ்த்தும் பாடங்கள்: இது கணிதத்தின் மீது மாணவர்களுக்கு வெறுப்பையும் அச்சத்தையும் உண்டாக்கும் விதத்தில் உள்ளது. தேசிய கல்வி ஆராய்ச்சி, பயிற்சிக் கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.) பாட திட்டத்தைக் கொண்டுள்ள சி.பி.எஸ்.இ. புத்தகங்களில்கூட இல்லாதவாறு கணித புத்தகத்தில் முதல் மூன்று பாடங்கள் குழப்பத்தில் ஆழ்த்துவதாக உள்ளன என்றெல்லாம் கணித ஆசிரியர்கள் குற்றஞ்சாட்டினர்.
"புளூபிரிண்ட்' குறித்து கவனம்: கணித பாடத்தில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைய இருப்பதை உணர்ந்த பள்ளிக் கல்வித்துறை, மந்த நிலையில் உள்ள மாணவர்கள் எளிதில் தேர்ச்சி பெறும் வகையில் தினசரி காலை, மாலை வேளைகளில் சிறப்புப் பயிற்சி அளிக்கும்படி பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டது.
காலாண்டில் சுமார் 40 மதிப்பெண்களுக்கும் குறைவாகப் பெற்ற மாணவர்களைக் கண்டறிந்து பயிற்சி அளிக்கப்பட்டது. இருப்பினும் பொதுத் தேர்வுக்கு வினாக்களைத் தேர்வு செய்யும் புளூ பிரிண்ட் குறித்தே ஆசிரியர்கள், மாணவர்களின் முழுக் கவனமும் இப்போது உள்ளது.
சிந்திக்கும் திறனுக்கு மதிப்பெண்: ஏனெனில் புதிய சமச்சீர் பாட திட்டத்தின்படி மாணவர்கள் சுயமாகச் சிந்தித்து பதிலளிக்கச் செய்யும் புதிய திட்டம் கணித பாடத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி வினாத் தாளின் முதல் பிரிவில் கேட்கப்படும் 15 ஒரு மதிப்பெண் வினாக்களில் 10 வினாக்கள் புத்தகத்தில் இருந்து கேட்கப்படும். மற்ற 5 வினாக்களும் புத்தகத்துக்கு வெளியே இருந்தே கேட்கப்படும்.
அதே போலவே இரண்டாவது பிரிவில் கேட்கப்படும் (கேள்வி எண் 16 முதல் கேள்வி எண் 30 வரை) 15 இரண்டு மதிப்பெண் வினாக்களில் முதல் 14 வினாக்களில் இருந்து (கேள்வி எண் 29 வரை) ஏதேனும் 9-க்கும், 30-வது வினாவுக்கு கண்டிப்பாகவும் விடையளிக்க வேண்டும். இந்த 30-வது வினா புத்தகத்துக்கு வெளியே இருந்தே தேர்வு செய்யப்படும்.
அதே போல 3-வது பிரிவில் கேட்கப்படும் 5 மதிப்பெண் வினாக்களில் முதல் 14 வினாக்களில் ஏதேனும் 8-க்கும், 45-வது வினாவுக்கு மட்டும் கண்டிப்பாகவும் விடையளிக்க வேண்டும். இந்த வினாவும் புத்தகத்துக்கு வெளியே இருந்தே கேட்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற வினாத்தாள் தயாரிப்பு முறை தமிழக பாடத் திட்டம் இதுவரை காணாதது. சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 பாடத்திட்ட முறையிலும்கூட இதுபோல் இல்லை. மொத்தம் 12 மதிப்பெண்கள் கொண்ட 7 வினாக்களைப் பயிற்சி வினாக்கள் அடிப்படையில் கேட்கப்படும் கேள்விகள் என்று புளூ பிரிண்ட் கூறுகிறது.
கணிக்க முடியாத 12 மதிப்பெண்கள்: இதுவரையிலும் 100 மதிப்பெண்களுக்கும் புத்தகத்தில் இருந்தே படித்து எழுதி முழு மதிப்பெண் பெற்று வந்த மாணவர்கள், இந்த ஆண்டு 88 மதிப்பெண்களுக்கான வினாக்களை மட்டுமே புத்தகத்தில் இருந்து எதிர்பார்த்து தேர்வுக்குச் செல்ல முடியும்.
பிளஸ்-2 கணித பாடத்தில்கூட 2 வினாக்கள் புத்தகத்துக்கு வெளியே இருந்து கேட்கப்படும் என்றாலும் அவற்றுக்குப் பதிலளிக்க வேண்டிய கட்டாயம் இல்லை.
ஆனால் 7 மாதங்களாக ஒரு புத்தகத்தைப் படித்து, அவசரப் பயிற்சி பெற்ற ஆசிரியர்களாலேயே இந்த 12 மதிப்பெண்ணுக்கும் எந்தவிதமான கேள்வி வரும் என்பதைக் கணிக்க முடியவில்லை.
அரசு கருணை காட்டுமா? ஆனால் புத்தகத்தையே போராடிப் பெற்று, ஆசிரியர்களுடனேயே சேர்ந்து புதிய பாடங்களையும் கற்றுக் கொண்ட மாணவர்கள், கணிதத்தில் முழு மதிப்பெண்ணை எப்படிப் பெறுவது, தேர்ச்சி பெறுவதில் சிக்கல் இருக்குமோ என்ற கலக்கத்தில் உள்ளனர். 10-ம் வகுப்பு கணிதத் தேர்வு வரும் ஏப்ரல் 16-ம் தேதி நடைபெற உள்ளது. அதற்குள் கணிதத் தேர்வு வினாத்தாள் முறையை புத்தகத்துக்கு உள்ளே இருந்து கேட்கும் அடிப்படையில் மாற்றி அமைக்க அரசு ஆவன செய்யுமா, அல்லது வேறு ஏற்பாடுகளைச் செய்யுமா என்பதே கணித ஆசிரியர்கள்-பெற்றோர்-மாணவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.



-dina vidiyal .