சென்னை, மார்ச் 25: பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் தமிழகம் முழுவதும் 47 மையங்களில் ஏப்ரல் 2-ம் தேதி தொடங்க உள்ளது.
இந்தப் பணிகள் ஏப்ரல் இறுதி வரை நடைபெறும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
மொத்தம் 20 ஆயிரத்துக்கும் அதிகமான முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களும், 2 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியரல்லாத பணியாளர்களும் இந்தப் பணியில் ஈடுபட உள்ளனர்.
பிளஸ் 2 மொழிப்பாடம், ஆங்கிலம், வணிகவியல் போன்ற முக்கியத்துவம் குறைந்த பாடங்களின் விடைத்தாள்கள் ஏப்ரல் 2-ம் தேதி முதல் திருத்தப்படுகின்றன.
இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட முக்கியப் பாடங்களுக்கான விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 10-ம் தேதி தொடங்கும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
மார்ச் 30-ல் நிறைவு: இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 8-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு மொத்தம் 8.2 லட்சம் பேர் பிளஸ் 2 தேர்வை எழுதி வருகின்றனர்.
பெரும்பாலான முக்கியப் பாடத் தேர்வுகள் முடிந்த நிலையில், வரும் 30-ம் தேதியுடன் பிளஸ் 2 தேர்வுகள் நிறைவடைகின்றன.
கடந்த ஆண்டு மொத்தம் 7 லட்சத்து 80 ஆயிரம் மாணவர்களுக்காக தமிழகம் முழுவதும் 40 விடைத்தாள் திருத்தும் மையங்கள் அமைக்கப்பட்டன.ற இந்த ஆண்டு 40 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் கூடுதலாகத் தேர்வு எழுதுவதால், விடைத்தாள் திருத்தும் மையங்களின் எண்ணிக்கை 47 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
பொறுப்பேற்க உத்தரவு: பிளஸ் 2 தேர்வு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதால் விடைத்தாள் திருத்தும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் ஆகியோர் பொறுப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் விடைத்தாள் திருத்தும் மையங்களில் வரும் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டம்மி எண் வழங்கப்படும்: பொறியியல், எம்.பி.பி.எஸ். படிப்புகளில் சேருவதற்கான முக்கியப் பாடங்களான இயற்பியல், கணிதம், வேதியியல், உயிரியல், கம்ப்யூட்டர் அறிவியல் போன்ற தாள்களுக்கு "டம்மி' எண் வழங்கும் பணிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் பாடங்களுக்கான விடைத்தாள்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் சேகரிக்கப்பட்டு டம்மி எண் வழங்கும் மையங்களுக்கு கொண்டுவரப்படும். அங்கு இந்த விடைத்தாள்களுக்கு டம்மி எண் வழங்கப்பட்டு, வெவ்வேறு ஊர்களுக்கு விடைத்தாள்கள் ரகசியமாக அனுப்பப்படும்.
கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தின் உதவியோடு டம்மி எண்கள் வழங்கும் பணி நடைபெறும். முக்கியப் பாடங்களுக்கான விடைத்தாள்கள் திருத்தப்பட்டவுடன், ஏற்கெனவே வழங்கப்பட்ட டம்மி எண் அடிப்படையில் கம்ப்யூட்டர் மூலம் உரிய பதிவெண்தாரர்கள் கண்டறியப்படுவர்.
அதன்பிறகு, அவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்படும்.
இயற்பியல் பாடத்துக்கு கூடுதல் மதிப்பெண் இல்லை: பிளஸ் 2 இயற்பியல் பாட வினாத்தாள் கடினமாக இருந்ததாக மாணவர்கள் பரவலாகத் தெரிவித்தனர்.
இதையடுத்து, இந்தப் பாடத்தில் மாணவர்களுக்கு கூடுதலாக மதிப்பெண் வழங்கப்படுமா என்று விசாரித்தபோது, பாடப் புத்தகத்தில் இருந்தே கேள்விகள் கேட்கப்பட்டுள்ளதால் கூடுதல் மதிப்பெண் வழங்க வாய்ப்பில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
-dina vidiyal .