HAPPY PONGAL WISHES

WELCOME TO DINAVIDIYAL...fast online tamil news network...

Saturday, 31 March 2012

முதன்முறையாக சமச்சீர் பாடத்திட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு

திருவண்ணாமலை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் 4ம் தேதி தொடங்குகிறது. இந்த ஆண்டு முதன்முறையாக சமச்சீர் பாட திட்டத்தின்கீழ் 35,907 மாணவ - மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர். தமிழகத்தில் இந்த ஆண்டு முதன்முறையாக, சமச்சீர் பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மெட்ரிக் பள்ளி மாணவர்கள், அரசு பள்ளி மாணவர்கள் அனைவரும் ஒரே பாடத்திட்டத்தின் கீழ் தேர்வு எழுத உள்ளனர். இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் 4ம் தேதி தொடங்கி, 23ம் தேதி வரை நடைபெற உள்ளது.

அதன்படி, 4ம் தேதி தமிழ் முதல் தாள், 9ம் தேதி தமிழ் இரண்டாம் தாள், 11ம் தேதி ஆங்கிலம் முதல் தாள், 12ம் தேதி ஆங்கிலம் இரண்டாம் தாள், 16ம் தேதி கணிதம், 19ம் தேதி அறிவியல், 23ம் தேதி சமூக அறிவியல் பாடத்திற்கான தேர்வு நடைபெற உள்ளது. எழுத்துத் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு அனைத்து பள்ளிகளிலும் நேற்று முதல் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு முதன்முறையாக, தேர்வில் ஆள்மாறாட்டத்தை தடுக்க, ஸ்கேன் செய்யப்பட்ட போட்டோவுடன் கூடிய நுழைவுச் சீட்டு வழங்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில், இந்த ஆண்டு 18,407 மாணவர்கள், 17,500 மாணவிகள் உள்பட 35,907 பேர் தேர்வு எழுத உள்ளனர். திருவண்ணாமலை கல்வி மாவட்டத்தில் 11,105 மாணவர்கள், 10,488 மாணவிகள் உள்பட 21,593 பேரும், செய்யாறு கல்வி மாவட்டத்தில் 7,302 மாணவர்கள், 7,012 மாணவிகள் உள்பட 14,314 பேரும் தேர்வு எழுத உள்ளனர். அதையொட்டி, 124 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நடப்பு கல்வி ஆண்டில் தரம் உயர்த்தப்பட்ட தரடாப்பட்டு, நீப்பத்துறை, செல்லங்குப்பம், கழிக்குளம், சே.கூடலூர், கிளையூர் அரசு பள்ளிகள் மற்றும் முகல்புறா தெரு நகராட்சிபள்ளி மாணவர்கள் முதன்முறையாக இந்த ஆண்டு 10ம் வகுப்பு தேர்வு எழுத உள்ளனர். 

மேலும், போளூர் தாலுகா ரேணுகொண்டாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி, தண்டராம்பட்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் புதிதாக தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதன்முறையாக அறிவியல் பாடத்திற்கு செய்முறைத் தேர்வு நடத்தப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 15ம் தேதி தொடங்கி 24ம் தேதி வரை செய்முறைத் தேர்வு நடந்தது. அறிவியல் பாட செய்முறைத் தேர்வுக்கு 25 மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. 

எனவே, நடைபெற உள்ள அறிவியல் பாட எழுத்துத்தேர்வில் 75 மதிப்பெண்களுக்கு மட்டுமே வினாக்கள் கேட்கப்படும். செய்முறைத் தேர்வில் 15 மதிப்பெண்கள், எழுத்துத் தேர்வில் 20 மதிப்பெண்கள் உள்பட 100க்கு 35 மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே தேர்ச்சி பெற்றதாக கருதப்படும்.
தேர்வில் முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க, முதன்மைக் கல்வி அலுவலர் நூர்ஜகான், மாவட்டக் கல்வி அலுவலர்கள் பத்ரு, சண்முகம் ஆகியோர் தலைமையில் சிறப்பு கண்காணிப்பு குழுக்களும், 34 பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன.-DINAVIDIYAL!