பஞ்சாப் முன்னாள் முதல்வர் பியாந்த்சிங்கை படுகொலை செய்த குற்றாவளி பல்வந்த்சிங்குக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.
கடந்த 1995ம் ஆண்டு ஓகஸ்ட் 31ம் திகதி பஞ்சாப் முதல்வர் பியாந்த்சிங், சண்டிகாரில் தலைமைச் செயலக வாசலில் தற்கொலை படையினரால் கொல்லப்பட்டார்.
இந்த தற்கொலைப்படைத் தாக்குதலில் சம்பவ இடத்திலேயே 17 பேர் பலியாயினர். இப்படுகொலையில் முக்கிய குற்றவாளியான பல்வந்த்சிங் ரஜோனாவிற்கு கடந்த 2007ம் ஆண்டு தூக்கு தண்டனை விதித்து சண்டிகார் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர், பாட்டியாலா சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், இவரது கருணை மனு ஜனாதிபதியிடம் உள்ளதை காரணம் காட்டி தண்டனையை நிறைவேற்ற முடியாத நிலையில் உள்ளதாக பாட்டியாலா சிறை கண்காணிப்பாளர், சண்டிகார் நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார்.
இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி வரும் 31ம் திகதி பல்வந்த்சிங்குக்கு மரண தண்டனையை நிறைவேற்றியே ஆக வேண்டும் என உத்தரவிட்டார்.
ஆனால் பல்வந்த்சிங்கின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற வேண்டும் என்று மாநில அரசின் சார்பில், மத்திய அரசிடம் கோரிக்கை விடப்பட்டது.
மேலும், பஞ்சாப் முதல்வர் பிரகாஷ்சிங் பாதல் டெல்லி சென்று பிரதமர் மற்றும் ஜனாதிபதியை சந்தித்து பல்வந்த்சிங்கின் மரண தண்டனையைக் குறைக்கும்படி வற்புறுத்த முடிவு செய்தார்.
பஞ்சாப்பில் போராட்டம் வெடித்தது: நாளை மறுநாள் பல்வந்த்சிங்குக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளதை கண்டித்து, பல்வேறு சீக்கிய அமைப்புகள் சார்பில் நேற்று பஞ்சாபில் போராட்டம் நடைபெற்றது. இதனால், பஞ்சாபில் நேற்று போக்குவரத்தை தடைபட்டது.
வணிக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. அசம்பாவிதங்கள் நடக்காதவாறு, ஏராளமான பொலிஸார் முக்கிய இடங்களில் குவிக்கப்பட்டுள்ளனர்.
பல்வந்த்சிங் விடயத்தில் அரசியல் விளையாடுகிறது. மனு, மேல் முறையீடு, மறு ஆய்வு ஆகியவற்றின் விடயத்தில், சட்டம் என்ன சொல்கிறதோ அது தான் எல்லாருக்கும் பொதுவானது. இது சட்டத்தின்படி அமைந்த நாடு. எனவே, நாம் அதை பின்பற்றித் தான் ஆக வேண்டும் என்று மத்திய சட்டத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியிருந்தார்.
ஆனால், சிரோண்மணி குருத்வாரா பிரபந்தக் ஆணைக்குழுவின் கோரிக்கையை ஏற்று, மத்திய அரசு நேற்று இரவு, பல்வந்த்சிங்கின் மரண தண்டனையை நிறுத்தி வைக்க உத்தரவிட்டது.-DINAVIDIYAL!