பொறியியல் கல்வி கற்ற மாணவர்கள் புதிய ஆராய்ச்சிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்றார் பெங்களூரில் உள்ள இந்திய ராணுவ ஆராய்ச்சித் துறையின் உதவி திட்ட இயக்குநரும், மூத்த விஞ்ஞானியுமான சி. தங்கவேலு.
திருநெல்வேலி அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் 2-வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று அவர் மேலும் பேசியது: இன்றைய உலகில் அறிவுசார்ந்த செயல்கள் மட்டுமே வரவேற்பு பெறுகின்றன. அதிலும் தொழில்நுட்ப அறிவு உயர்ந்ததாக மதிக்கப்படுகிறது. இத்தகைய தொழில்நுட்ப கல்வி அறிவைப் பெறும் வாய்ப்பு பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு தான் அதிகம் சாத்தியமாகிறது. பொறியியல் மாணவர்கள் தாங்கள் பெற்றுள்ள தொழில்நுட்ப அறிவை நல்ல வழியில் பயன்படுத்த வேண்டியதும் அவசியம்.
வளர்ந்து வரும் உலகச் சூழலில் எத்தனையோ மாற்றங்கள் அடிக்கடி நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன. இந்த மாற்றங்கள் அனைத்து துறைகளிலும் தனது தடத்தைப் பதித்துச் செல்கிறது. எனவே, மாற்றங்களுக்கு ஏற்ப புதியவற்றை புகுந்த வேண்டிய கட்டாயங்களும் ஏற்படுகிறது. இதற்கு ஆராய்ச்சிகளும், கண்டுபிடிப்புகளும் மட்டுமே கை கொடுக்கும்.
புதிய ஆராய்ச்சிகளில் பொறியியல் மாணவர்கள் தைரியமாகக் களமிறங்க வேண்டும். ஆராய்ச்சிகளுக்கு அடிப்படையான தொழில்நுட்ப அறிவைப் பெற்றுள்ள நீங்கள், சமுதாயத்தின் மீது தங்களுக்குள்ள பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். கடும் உழைப்பும், முழு ஈடுபாடும் வெற்றியை வசப்படுத்தும் என்றார் தங்கவேலு.
பல்கலைக்கழக துணைவேந்தர் மா. ராஜாராம் பட்டங்கள் வழங்கினார். 117 மாணவ, மாணவிகள் பட்டங்களும், 19 பேர் தங்கப் பதக்கங்களும் பெற்றனர். இப் பல்கலைக்கழகத்தின் ஆளுகைக்குட்பட்ட பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த மொத்தம் 16,472 பேர் பட்டங்கள் பெற தகுதிப் பெற்றுள்ளனர். நேரில் பட்டங்கள் பெறாத பிற மாணவர்களுக்கு அந்தந்த கல்லூரிகளிலேயே பட்டங்கள் அளிக்கப்பட உள்ளன.-DINAVIDIYAL!