சென்னை: சென்னை, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இருந்து, பணி நிமித்தமாக, வெளி மாநிலங்கள், வெளிநாடுகளுக்கு நிறையப் பேர் பயணம் செய்வதால், மற்ற மாவட்டங்களைவிட, இம்மாவட்டங்களில் பன்றிக் காய்ச்சல் வைரஸ் (எச்1 என்1) தாக்கம் அதிகம் இருப்பதாக தெரிகிறது. வெளி மாநிலங்களிலிருந்து, தமிழகம் வருவோர் மூலம், "எச்1 என்1' வைரஸ் பரவுவதை தடுக்க, விமான நிலையங்கள், முக்கிய ரயில் நிலையங்கள் மற்றும் பிற மாநில எல்லைகளில் உள்ள பஸ் நிலையங்களுக்கு வரும் பயணிகளை, பரிசோதிக்கும் முகாம் துவங்கப்பட்டுள்ளது.
சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை மற்றும் தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனை ஆகிய வற்றில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள, பன்றிக் காய்ச்சல் தனி வார்டுகளை, சுகாதாரத் துறை அமைச்சர் விஜய், நேற்று ஆய்வு செய்தார். இம்மருத்துவமனைகளின் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு, பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி போடும் பணியையும், அவர் துவக்கி வைத்தார்.
29 பேருக்கு காய்ச்சல்: ஆய்வுக்குபின், அமைச்சர் விஜய், நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில், ஒரு வாரமாக, பன்றிக் காய்ச்சலின் தாக்கம் உணரப்படுகிறது. இன்று (நேற்று) வரை, சென்னை 14; கோவை 11; திருவள்ளூர், திருப்பூர், கடலூர் மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில், தலா ஒருவருக்கு என, மொத்தம், 29 பேருக்கு இக்காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இலவசம்: "பாரசிட்டமால்' மாத்திரைகளை உட்கொண்டும், ஒருவருக்கு மூன்று நாட்களுக்கு மேல், சளி, காய்ச்சல், இருமல், தொண்டை வலி, உடம்பு வலி ஆகியவை இருந்தால், அவர் பன்றிக் காய்ச்சல் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. இப்பரிசோதனை, சென்னை, கோவை, மதுரை மற்றும் நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில், இலவசமாக செய்யப்படுகிறது.
தனிக் கட்டணம்: சென்னை, வேலூர், திருச்சி, கோவை, நாகர்கோவில் ஆகிய இடங்களில், அரசால் அங்கீகரிக்கப்பட்ட, 12 தனியார் பரிசோதனை மையங் களும் உள்ளன. இம்மையங்களுக்கான பரிசோதனைக் கட்டணம், விரைவில் அறிவிக்கப்படும். அரசால் அங்கீகரிக்கப்படாத தனியார் மையங்களில், பன்றிக் காய்ச்சல் பரிசோதனை செய்வதை, தவிர்க்க வேண்டும். இம்மையங்கள் குறித்து, புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்க முடியும்.
"டாமிபுளூ': அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனைகளில், பன்றிக் காய்ச்சல் சிகிச்சைக்காக, 20 படுக்கைகள் கொண்ட தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. வெளிநோயாளிகளாக சிகிச்சை பெறுவோருக்கான, "டாமி புளு' (ஒசால்டாமாவீர் - வேதியியல் பெயர்) மாத்திரைகள், அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவசமாக தரப்படுகின்றன.
பயணிகளுக்கு... சென்னை, கோவை, திருப்பூர் மாவட்டங்களில், பணி நிமித்தமாக, வெளி மாநிலங்கள், வெளிநாடுகளுக்கு நிறையப் பேர் பயணம் செய்வதால், மற்ற மாவட்டங்களைவிட, இம்மாவட்டங்களில், பன்றிக் காய்ச்சல் வைரஸ் (எச்1 என்1) தாக்கம் அதிகம் இருப்பதாகத்
தெரிகிறது. வெளி மாநிலங்களிலிலிருந்து தமிழகம் வருவோர் மூலம், "எச்1 என்1' வைரஸ் பரவுவதைத் தடுக்க, விமான நிலையங்கள், முக்கிய ரயில் நிலையங்கள் மற்றும் பிற மாநில எல்லைகளில் உள்ள பஸ் நிலையங்களுக்கு வரும் பயணிகளை, பரிசோதிக்கும்முகாம் துவங்கப்பட்டுள்ளது. பன்றிக் காய்ச்சல் அறிகுறி உள்ளோர், பொது இடங்களில் வாயுறை அணிவது, கைகளை அவ்வப்போது தண்ணீரில் சுத்தம் செய்வது, காய்ச்சல் குணமடையும் வரை, தனியறையில் ஓய்வெடுப்பது ஆகிய வழிமுறைகளை பின்பற்றினாலே, வைரஸ் பரவலை எளிதில் தடுக்கலாம்.
வீரியம் குறையும்: பன்றிக் காய்ச்சலின் தாக்கம், தமிழகத்தில் அங்கொன்றும், இங்கொன்றுமாகத் தான் உள்ளது. இனி, கோடையின் தாக்கம் அதிகரிக்கும் என்பதால், "எச்1 என்1' வைரசின் வீரியம், மேலும் குறைய வாய்ப்புள்ளது. தொற்றுநோய் எனச் சொல்லும் அளவிற்கு, பன்றிக் காய்ச்சலின் தாக்கம் இல்லாததால், தற்போதைக்கு பொதுமக்களுக்கு பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி போட வேண்டிய அவசியம் இல்லை. முன்னெச்சரிக்கையாக, சென்னை மற்றும் கோவையில் உள்ள அரசு மருத்துவமனைகளின் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு, தடுப்பூசி போடப்படுகிறது. மத்திய அரசிடமிருந்து, 55 லட்ச ரூபாய் மதிப்பீட்டில், 55 ஆயிரம் தடுப்பூசிகளை வாங்க உள்ளோம். இவ்வாறு விஜய் கூறினார்.-DINAVIDIYAL!