இஸ்லாமாபாத்: அல் - குவைதா தலைவர் ஒசாமா பின்லாடன் பாகிஸ்தானில், ஒன்பது ஆண்டு காலம் வாழ்ந்ததாகவும், இந்தக் கால கட்டத்தில், நான்கு குழந்தைகளுக்குத் தந்தையானார் என்றும், அவரது மூன்றாவது மனைவி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில், 2001ல் இரட்டைக் கோபுரம் தகர்ப்பு சம்பவத்துக்குப் பிறகு, அமெரிக்க புலனாய்வுத் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இதன் காரணமாக, அல் குவைதா தலைவர் ஒசாமா பின்லாடனின் குடும்பத்தினர் தலைமறைவு வாழ்க்கையைத் துவக்கினர். கடந்த ஆண்டு மே மாதம், பாகிஸ்தானின் அபோதாபாத்தில் ஒளிந்திருந்த ஒசாமா பின்லாடனை, அமெரிக்க அதிரடிப்படையினர் சுட்டுக் கொன்றனர். இந்தச் சம்பவத்தில், ஒசாமாவின் 20 வயது மகன் கலீலும், ஒசாமாவின் உதவியாளர்கள் இருவரும் பலியாயினர். ஒசாமாவின் இளைய மனைவி அமல் அகமது அப்துல் பதேவுக்கு காலில் குண்டுக் காயம் ஏற்பட்டது.
வீட்டுச் சிறை: அமெரிக்க அதிரடிப்படையினர் ஒசாமாவின் மூன்று மனைவிகளையும், குழந்தைகளையும் பாகிஸ்தான் நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர். பாகிஸ்தானில் முறைகேடாக இவர்கள் தங்கியிருந்தாகக் கூறி, தற்போது இவர்கள் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஒசாமா பின்லாடனை பற்றி தகவல் தெரிவிக்க, அரேபியாவை சேர்ந்த மூத்த மனைவியர் இருவரும் மறுத்து விட்டனர். ஆனால், 30 வயதான அப்துல் பதே மட்டும், ஒசாமாவை பற்றிய சில உண்மைகளைத் தெரிவித்தார்.
பதே தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளதாவது: முஜாகிதீனைத்தான் மணக்க வேண்டும் என்றிருந்ததால், ஒசாமா பின்லாடனை விரும்பி மணந்தேன். 2000ம் ஆண்டு ஒசாமாவை திருமணம் செய்து கொண்ட அதே ஆண்டில், ஜூலை மாதம் கராச்சிக்கு வந்தேன். அதன் பின் சில மாதம் கழித்து, ஆப்கானிஸ்தானின் காந்தகார் நகருக்குச் சென்று பின்லாடனுடன் குடும்பம் நடத்தினேன்.
ஏழு வீடு மாற்றம்: அவருடன் மூத்த மனைவிகள் இரண்டு பேர் இருந்தனர். அமெரிக்க தாக்குதல் சம்பவத்திற்கு பிறகு, நான் கராச்சிக்குத் திரும்பி விட்டேன். அப்போது எனக்கு சபீயா என்ற மகள் இருந்தாள். ஒசாமாவின் மூத்த மகன் சாத் உதவியுடன், பாகிஸ்தானில் ஏழு முறை வீட்டை மாற்றினோம். 2002ல் பெஷாவருக்கு சென்று, மீண்டும் கணவருடன் குடும்பம் நடத்தினேன். அமெரிக்க புலனாய்வுத் துறையினரின் கண்காணிப்பு தீவிரமானதும், ஸ்வாட் மாகாணத்தில் உள்ள ஷங்லா மாவட்டத்தில் வசித்தோம். 2003ல் இஸ்லாமாபாத் அருகே உள்ள ஹரிப்பூரில் குடிபெயர்ந்தோம். அங்கு ஒசாமாவுடன் இரண்டு ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்தேன்.
போலியான தகவல்: இந்தக் கால கட்டத்தில் எனக்கு அசியா என்ற மகளும், 2004ல் இப்ராகிம் என்ற மகனும் பிறந்தனர். இருவரும் அரசு மருத்துவமனையில் தான் பிறந்தனர். மருத்துவமனையில் என்னைப் பற்றி போலியான தகவல்களைத் தெரிவித்திருந்தேன். கடைசியாக, 2005ல் தான் அபோதாபாத் வீட்டுக்கு குடிபெயர்ந்தோம். இந்த வீட்டில் இருந்தபோது தான், கடந்த 2006ல் சைனாப், 2008ல் ஹுசைன் ஆகியோர் பிறந்தனர். அபோதாபாத் வீட்டில் இருந்தபோது, பாகிஸ்தானை சேர்ந்த இப்ராகிம் மற்றும் அப்ரார் இருவரும் தான், எங்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து வந்தனர். வெளியுலகத்துடன் அவர்கள் மூலம் தான் எங்களுக்குத் தொடர்பு ஏற்பட்டது. கடிதங்களும் அவர்கள் மூலம் தான் எங்களுக்குக் கிடைக்கும். இவ்வாறு பதே கூறினார்.
உதவிக்கு வந்த சகோதரர்கள்: பதே காலில் குண்டுக் காயம் ஏற்பட்டதால் அவருக்கு உதவி செய்ய, ஏமன் நாட்டை சேர்ந்த அவரது சகோதரர்கள் பாகிஸ்தான் வந்துள்ளனர். பாகிஸ்தானில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்ததற்காக, ஒசாமாவின் மூன்று மனைவிகளும், மரியம், 21, சுமாயா, 20 என்ற இரண்டு மகள்களும் தற்போது ஒன்றரை மாதத்திற்கு வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த தண்டனை காலம் முடிந்ததும், மூத்த மனைவியர் இருவரும் சவுதிக்கும், இளம் மனைவி பதே ஏமனுக்கும் திருப்பி அனுப்பப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.-DINAVIDIYAL!