-DINAVIDIYAL!
இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கிடையில், கொழும்பு சரவணமுத்து ஸ்டேடியத்தில் செவ்வாய்க்கிழமை துவங்கிய இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில், அணித் தலைவர் மஹெல ஜயவர்தனவின் சதம், இலங்கை அணியை சரிவிலிருந்து மீட்டது.
ஆட்ட நேர இறுதியில், இலங்கை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 238 ரன்கள் எடுத்திருந்தது.
இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன், தனது முதல் ஐந்து ஓவர்களில் 49 ரன்கள் கொடுத்து, மூன்று விக்கெட்டுகளைச் சாய்த்தார். துவக்க ஆட்டக்காரர்கள் திரிமனெ (8), தில்ஷன் (14) மற்றும் சங்ககரா (0) ஆகியோர் ஆண்டர்சன் வீச்சில் தாக்குப் பிடிக்க முடியாமல் தொடர்ந்து வெளியேறினார்கள்.
மஹெல ஜயவர்தன மற்றும் திலன் சமரவீர ஆகிய இருவரும் இணைந்து, 124 ரன்களைச் சேர்த்தனர். மஹெல 105 ரன்கள் எடுத்து, கிரேம் ஸ்வான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். காலியில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில், 30-வது சதத்தை அடித்து மஹெல சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில், இலங்கை அணி வெற்றி பெற்றது. தற்போது டெஸ்ட் தர வரிசையில் முதலிடத்தில் உள்ள இங்கிலாந்து அணி, அதைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டுமானால், இந்தப் போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.