-DINAVIDIYAL!
லக்னோ: மகாத்மா காந்திக்கு தேசத் தந்தை அந்தஸ்து எப்போது வழங்கப்பட்டது என்பதை அறிய தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு தாக்கல் செய்த மாணவிக்கு, இதுகுறித்த தகவல் இல்லை என்ற பதிலே தகவல் ஆணையத்திடம் இருந்து கிடைத்துள்ளது.
உ.பி. மாநிலம் லக்னோவைச்சேர்ந்தவர் ஐஸ்வர்யா பரஷ்ஹார் (10). இவர் அங்குள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். மகாத்மா காந்திக்கு தேசத்தந்தை என்ற அந்தஸ்து வழக்கப்பட்டது குறித்து 6-ம் வகுப்பு மாணவி தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இவர் கடந்த பிப்ரவரி மாதம், மத்திய தகவல் அறியும் கமிஷனருக்கு அனுப்பிய மனுவில், இந்தியாவின் தேசத்தந்தை என மகாத்மா காந்திக்கு அந்தஸ்து வழங்கப்பட்டது எப்போது, புகைப்படம் மற்றும் வேறு ஏதேனும் ஆதாரங்கள் உள்ளனவா? என விவரம் தருமாறு பிரதமர் அலுவலகத்திற்கு உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
இதற்கிடையே சிறுமி அனுப்பியிருந்த மனு குறித்து உள்துறை அமைச்சகத்திடம் கேட்குமாறு , பிரதமர் அலுவலகம் மாணவியின் மனுவை திருப்பி அனுப்பியது. பின்னர் உள்துறை அமைச்சகத்திடம் போதிய ஆதாரம் கிடைக்கவில்லை ஆதலால் இவரது மனு இந்திய தேசிய ஆவண காப்பகத்திற்கு (என்.ஏ.ஐ) அனுப்பி வைக்கப்பட்டது. தேசிய ஆவண காப்பகத்திலும் மகாத்மாவிற்கு தேசத்தந்தை அந்தஸ்து வழங்கப்பட்ட தகவல் எதுவும் கிடைக்கவில்லை.
இது குறித்து இந்திய தேசிய ஆவண காப்பகத்தின் துணை இயக்குனர் ஜெயப்பிரபா ரவீந்திரன் கூறியதாவது: மகாத்மா காந்திக்கு தேசத்தந்தை என்ற அடைமொழியானது எங்கு எப்போது வழங்கப்பட்டது என்பது குறித்த தகவல் இதுவரை கிடைக்கவில்லை அது போன்று ஆவணம் கிடைக்க வாய்ப்பில்லை எனினும் மனுதாரர் , இது தொடர்பாக உறுதியாக நம்பத்தகுந்த ஆவணங்கள் , நூலக ஆதாரங்கள் ஆராய்ச்சி வாயிலாக கிடைத்தாலோ அல்லது வைத்திருந்தாலோ ஆவணகாப்பகத்தில் வைத்து பராமரிக்கப்படும் என்றார்.