HAPPY PONGAL WISHES

WELCOME TO DINAVIDIYAL...fast online tamil news network...

Monday, 9 April 2012

14 ஆண்டுகளில் விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வந்து அசத்தும் மாணவன்

கான்பூர்: தொடர்ந்து 14 ஆண்டுகளாக, ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல், பள்ளிக்கு வருகை புரிந்து சாதனை படைத்துள்ளான் கான்பூர் மாணவன். தன் சாதனை, கின்னசில் இடம் பெறவும் விண்ணப்பித்துள்ளான்.

உத்தர பிரதேச மாநிலம், கான்பூரைச் சேர்ந்த முகமது இக்ரம் - நூர் ஹாஷ்மி தம்பதியின் மகன் முகமது ஓமர், 17. இவன் இங்குள்ள செயின்ட் அலோஷியஸ் பள்ளியில் பிளஸ் 2 படிக்கிறான். இவன், தன் சாதனை குறித்து கூறியதாவது:

நான் பள்ளிக்குத் தவறாமல் செல்வேன். இதை நான் வேண்டுமென்றே செய்வதில்லை. சொந்த விருப்பம் மற்றும் ஆர்வத்தின் பேரில் தான் செய்து வருகிறேன். ஒரு நாள் எங்கள் வீடு இருக்கும் பகுதியை மழை நீர் சூழ்ந்த போதும், பள்ளிக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு சென்றேன்.

உடல் நலக்குறைவு ஏற்பட்டாலும், மாத்திரையை விழுங்கி விட்டு, பள்ளிக்குச் சென்று விடுவேன். மழைக் காலத்தில் ஒரு நாள், என் வீட்டைச் சுற்றி முழங்கால் அளவுக்கு தண்ணீர் நின்றதால், என் தந்தையின் ஸ்கூட்டர் பழுதாகி விட்டது. ஆனாலும், விடவில்லை. தொழிலாளி ஒருவரிடம் சைக்கிளை வாங்கிக் கொண்டு பள்ளிக்குச் சென்றேன்.

நான், நாள் தவறாமல் பள்ளி சென்று வருவதற்கு என் தாயும் ஒரு காரணம். அவர் தான் என்னை தூண்டி விட்டு, எந்தத் தருணத்திலும் பள்ளிக்குச் செல்லாமல் இருக்கக்கூடாது என, அடிக்கடி அறிவுரை கூறுவார். என் தம்பி தற்போது பத்தாவது படித்து வருகிறான். அவனும் ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் பள்ளிக்குச் சென்று வருகிறான்.

நான் கிரிக்கெட் ரசிகன். பாட்டுக் கேட்பதிலும் ஆர்வம் உண்டு. தொடர்ந்து 14 ஆண்டுகளாக, ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் பள்ளி சென்றதால், கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெறுவதற்காக விண்ணப்பித்துள்ளேன். எனது இந்தச் சாதனைக்கு கடவுளும் துணையாக இருந்துள்ளார். நான் இப்படி அர்ப்பணிப்பு உணர்வுடன் நடந்து கொள்வதைப் பார்த்து, எனது ஆசிரியர்களும் என்னைப் பாராட்டுவர். இவ்வாறு ஒமர் கூறினார்.

ஒமரின் ஆசிரியரான பிரதீப் குப்தா கூறுகையில், "கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற எப்படி விண்ணப்பிப்பது என, ஒமருக்கு நான்தான் சொல்லிக் கொடுத்தேன். இளம் வயதிலேயே அவர் சாதித்துள்ளான். தொடர்ந்து 14 ஆண்டுகளாக, விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வருவது சாதனை இல்லையா? 100 சதவீத வருகைப் பதிவுக்காக ஒமருக்கு சான்றிதழ் வழங்கவும் பள்ளி நிர்வாகம் தீர்மானித்துள்ளது. அந்தச் சான்றிதழும் கின்னஸ் சாதனை புத்தக அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும்,&'&' என்றார்.-DINAVIDIYAL!