HAPPY PONGAL WISHES
Monday, 9 April 2012
ஐ.ஐ.டி., நுழைவு தேர்வில் மாணவியர் ஒரு இடத்திற்கு 58பேர் போட்டி
சென்னை: நாடு முழுவதும், ஐ.ஐ.டி.,யில் உள்ள, 10 ஆயிரம் இடங்களுக்கான பொது நுழைவுத் தேர்வு நேற்று நடந்தது. தேர்வு எழுதிய 5.8 லட்சம் பேரில், அதிக அளவில் மாணவியரே பங்கேற்றனர். இதன் மூலம், ஒரு இடத்தைப் பிடிக்க 58 பேர் போட்டி போடுகின்றனர்.
சென்னை, மும்பை, டில்லி உட்பட நாடு முழுவதிலுமுள்ள, 15 இந்திய தொழில்நுட்பக் கழகங்களில் (ஐ.ஐ.டி.,) சேருவதற்கான பொது நுழைவுத் தேர்வு நேற்று நடந்தது. நாடு முழுவதும், 1,067 மையங்களில் நடந்த இத்தேர்வை, 5.8 லட்சம் மாணவ, மாணவியர் எழுதினர்.
20 மையங்கள் தமிழகத்தில், சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை, கோவை, சேலம் உள்ளிட்ட நகரங்களில் உள்ள 20 மையங்களில் தேர்வு நடந்தது. சென்னையில் ஆறு மையங்களில் நடந்த இத்தேர்வில், 78 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்றனர். கடந்த ஆண்டை விட, 13 ஆயிரம் மாணவர்கள் கூடுதல். காலை 10 மணிக்கு துவங்கும் தேர்வுக்காக, அதிகாலையிலேயே தேர்வு மையங்களில் மாணவ, மாணவியர் தங்கள் பெற்றோருடன் குவிந்தனர். தேர்வில், இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டன.
ஐ.ஐ.டி.,யில் கல்வி கற்கும் மாணவியரின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பொருட்டு,"ஆன்-லைன்' மூலம் விண்ணப்பிக்கும் மாணவியரின் விண்ணப்பக் கட்டணத்தை ரத்து செய்து, மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பால், இத்தேர்வில் அதிக அளவில் மாணவியர் பங்கேற்றனர். அதே நேரத்தில், மாணவர்களுக்கு விண்ணப்பக் கட்டணமாக 1,800 ரூபாய் வசூலிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இத்தேர்வில், கடந்த ஆண்டு 4.8 லட்சம் பேர் பங்கேற்றனர்.
நேற்று நடந்த தேர்வில், 5.8 லட்சம் பேர் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டுடன் இத்தேர்வு முறை முடிவடைவதால், அடுத்த ஆண்டு முதல் ஐ.ஐ.டி., நுழைவுத் தேர்வில், "பிளஸ் 2' மதிப்பெண்ணும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். இதன் மூலம் ஐ.ஐ.டி., மட்டுமின்றி என்.ஐ.டி., போன்ற தேசிய தொழில்நுட்பக் கல்லூரிகளிலும் மாணவர்கள் சேர முடியும்.
தேர்வு நடந்த மையங்களில், பெரும்பாலான மாணவர்கள், தங்கள் பெற்றோருடன் வந்தனர். ஒரு சில தேர்வு மையங்களில், மாணவர்களின் பெற்றோர் கடும் வெயிலில் வெளியில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
மேலும், குடிநீர், கழிப்பிடம் உட்பட அடிப்படை வசதிகளைக் கூட, தேர்வு மையத்திற்காக தேர்வு செய்யப்பட்ட பள்ளி நிர்வாகத்தினர் வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து, வேலூரைச் சேர்ந்த மணி கூறும்போது, "ஒவ்வொரு ஆண்டும் இது போன்ற பிரச்னைகளை பெற்றோர் எதிர்கொள்கின்றனர். தேர்வு நடக்கும் பள்ளி நிர்வாகத்தினர், குடிநீர் வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது,'' என்றார்.-DINAVIDIYAL!