-DINAVIDIYAL!
சென்னை: ஒரு தலைவராக மாறி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று விரும்புபவர்கள், சமுதாயத்தில் மாற்றம் ஏற்படுத்த விரும்புபவர்கள் சிவில் சர்வீஸ் தேர்வை எழுதலாம், என்று ஐ.ஜி., சைலேந்திரபாபு பேசினார்.
"சிவில் சர்வீஸ் தேர்வுகளில் வெற்றி பெறுவது குறித்து' வடக்கு மண்டல ஐ.ஜி., சைலேந்திரபாபு பேசியதாவது: மாணவர்கள் எந்த கல்லூரியில், என்ன படிப்பு சேர்ந்தாலும் கல்லூரி குறித்தும், வசதிகள் குறித்தும், படிப்பு குறித்தும் முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். என்ன படிக்கலாம் என்ற ஆசைப்படும் போது, பெரிதாக ஆசைப்படுங்கள் அப்போது தான் பெரிதாகக் கிடைக்கும். அதிக செலவு செய்து படிக்கும் கல்வி தான் பெரிது என்று நினைக்காதீர்கள்.
இப்போதெல்லாம் பொறியியல் படித்த மாணவனுக்கு 8,000 ரூபாய் சம்பளம் தான் கிடைக்கிறது. காவல் துறையில் காவலராக சேர்ந்தால் கூட 20 ஆயிரம் ரூபாய் சம்பளம் கிடைக்கிறது. அதனால், எதற்காக, எந்த வேலைக்காக நீங்கள் படிக்கிறீர்கள், எதில் சேர வேண்டும் என்பதை யோசியுங்கள். இந்திய ராணுவத்தில் 23 ஆயிரம் பணியிடங்கள் காலியாக இருக்கிறது. ஐந்து லட்சம் பட்டயக் கணக்காளர் (ஆடிட்டர்) பணியிடங்கள் காலியாக உள்ளன. நீங்கள் எதை, எப்படி தேர்வு செய்கிறீர்களோ அது உங்களுக்கு கிடைக்கும்.
பல்வேறு படிப்புகள், பணியிடங்கள் இருந்தாலும் சிவில் சர்வீஸ் தேர்வு என்பது அதிலிருந்து மாறுபட்ட தனிச்சிறப்பு பெற்றதாகும். என்னிடம் பயிற்சி பெற்ற 60 பேர், ஐ.ஏ.எஸ்., தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வில், தேசிய அளவில் முதலிடம் பெற்ற திவ்யதர்ஷினி என்னிடம் பயிற்சி பெற்றவர் தான்.
நீங்கள் சிவில் சர்வீஸ் தேர்ச்சி பெற்றால் உங்களுக்கு அங்கீகாரம் உடனே கிடைக்கும். உடனடியாக வேலை கிடைக்கும் உங்கள் பெற்றோரின் மரியாதை உடனடியாக உயரும். மத்திய பணியாளர் தேர்வாணையம் மூலம், ஐ.ஏ.எஸ்., ஐ.எப்.எஸ்., ஐ.பி.எஸ்., என, 22 வகையான பதவிகளுக்கு சிவில் சர்வீஸ் தேர்வு ஆண்டுதோறும் நடக்கிறது.
இந்த தேர்வு எழுத எந்த பரிந்துரையும் தேவையில்லை: 21 வயது நிறைவடைந்திருந்த, பட்டதாரியாக இருந்தால் போதுமானது. தேர்வில் வெற்றி பெற்றால், சிறிய வயதில் உயர்ந்த பதவி கிடைக்கும். நான் எனது 24வது வயதில், ஐ.பி.எஸ்., அதிகாரியாக பணியில் சேர்ந்தேன். அப்போது எனக்கு கீழ், 12 ஆயிரம் அதிகாரிகள் பணியாற்றினர்.
ஒரு தலைவராக மாறி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று விரும்புவர்கள், சமுதாயத்தில் மாற்றம் ஏற்படுத்த விரும்புபவர்கள் சிவில் சர்வீஸ் தேர்வை எழுதலாம். நீங்கள் ஒரு மருத்துவராக முயற்சித்தால், மருத்துவராக மட்டுமே ஆக முடியும். ஆனால், மருத்துவம் படிக்க வாய்ப்பில்லாமல் போன ஐ.ஏ.எஸ்., அதிகாரி சுப்புராஜ், சுகாதாரத் துறை செயலராகவே பணியாற்ற முடிந்தது.
மூன்று கட்டங்களாக நடக்கும் இந்த தேர்வை எழுத, உங்களது பொது அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள். ஏற்கனவே நீங்கள் படித்து முடித்த வகுப்புப் பாடங்கள் அனைத்தையும் திரும்பப் படியுங்கள். பதட்டத்தை தவிர்த்து, உங்களது தொடர்பு திறனை வளர்த்துக் கொள்ளுங்கள். இப்போது தமிழில் கூட தேர்வை எழுத முடியும். ஆனால், முதல் கட்ட தேர்வுக்கு ஆங்கில அறிவு அவசியமானது. ஆங்கில அறிவை வளர்க்க ஆங்கில நாளிதழ்கள், நாவல்களைப் படியுங்கள் ஆங்கிலத்தில் பேசிப் பழகுங்கள். நாள்தோறும் தவறாமல் ஒரு மணிநேரமாவது உடற்பயிற்சி செய்யுங்கள்.
சிவில் சர்வீஸ் தேர்வில் மாணவர்கள் வெற்றி பெற, தமிழக அரசு இலவச புத்தகங்களை அளித்து, இலவச பயிற்சி அளிக்கிறது. பல்வேறு நிறுவனங்கள் இலவசமாக பயிற்சி அளிக்கிறது. தேர்வில் வெற்றி பெற உங்களுக்கு நான்கு வாய்ப்புகள் கிடைக்கும் என்பதால், வெற்றி பெறும் வரை தொடர்ந்து போராடுங்கள். "மற்றவர்களால் முடியும் என்றால், என்னாலும் அதைச் செய்து முடிக்க முடியும்; மற்றவர்களால் முடியாது என்றால் அது என்னால் முடியும்&' என்று நம்புங்கள். இவ்வாறு அவர் பேசினார்.
கலகலப்பாக்கிய ஐ.ஜி.,: "வழிகாட்டி' நிகழ்ச்சியில் பேசிய ஐ.ஜி., சைலேந்திரபாபு மேடையில் நின்று வழக்கமான பேச்சாளர்கள் போல் பேசிவிட்டு கிளம்பாமல், அங்கிருந்து இறங்கி, மாணவர்கள், பெற்றோர் மத்தியில் நின்று, பொது அறிவு தொடர்பான கேள்விகளை கேட்டு, மாணவர்களின் பதிலைப் பெற்றதால், கருத்தரங்கம் கலகலப்பாக இருந்தது.
மாணவர்களுக்கு அவர் கொடுத்த ஊக்கமும், உற்சாகமும், பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அவர் பேசி முடித்து புறப்படும் போது, அவரை ஆர்வத்தோடு பாராட்டி பெற்றோரும், மாணவர்களும் வழியனுப்பி வைத்ததே, அவரது பேச்சிற்கு கிடைத்த பெரும் மரியாதையாக அமைந்தது.