HAPPY PONGAL WISHES

WELCOME TO DINAVIDIYAL...fast online tamil news network...

Friday 13 April 2012

23ஆம் தேதி நள்ளிரவு முதல் பெட்ரோல் நிலையங்கள் ஸ்ட்ரைக்

கூடுதல் கமிஷன் தரக்கோரி 23ஆம் தேதி நள்ளிரவு முதல் பெட்ரோல் பங்க்குகள் காலவரையற்ற போராட்டம் நடத்த முடிவெடுத்துள்ளன.

நாடு முழுவதும் 40 ஆயிரம் பெட்ரோல் பங்க்குகள் உள்ளன. இவை பல்வேறு சங்கங்களின் கீழ் செயல்பட்டு வந்தன. அவற்றை ஒருங்கிணைத்து அகில இந்திய பெட்ரோலியம் விற்பனையாளர்கள் பேரமைப்பு என்ற சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. 

இதன் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடந்தது. இதில் பெட்ரோல்-டீசல் விற்பனைக்கு கூடுதல் கமிஷன் கேட்டு வருகிற 23-ந் தேதி நள்ளிரவு முதல் வேலை நிறுத்தம் செய்ய தீர்மானிக்கப்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 39 பைசாவும், ஒரு லிட்டர் டீசலுக்கு 17 பைசாவும் கூடுதல் கமிஷன் தரவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

கடந்த 2010-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20-ந் தேதி ஒருநாள் பெட்ரோல் பங்க் ஸ்டிரைக் நடந்தது. அப்போது பெட்ரோல் பங்க் உரிமையாளர்களின் கோரிக்கை பற்றி ஆராய பெட்ரோலியத்துறை மந்திரி முரளி தியோரா ஒரு குழு அமைத்தார். 

அந்த குழுவின் அறிக்கை குறித்து பெட்ரோலியத்துறை இணை செயலாளர் பரிசீலித்து நடவடிக்கை எடுப்பார் என்று கூறப்பட்டது. குழு அறிக்கை அளித்து 18 மாதங்கள் ஆகியும் இதில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே குழுவின் பரிந்துரையை உடனே அமுல்படுத்த வேண்டும் என்று பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. 

கடந்த 2 ஆண்டுகளில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.20-ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.9-ம் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் பங்க்குகளுக்கு கமிஷன் உயர்த்தப்படவில்லை என்றும் கூட்டத்தில் சுட்டிகாட்டப்பட்டது. 

இப்போது ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.1.44-ம், டீசலுக்கு 87 பைசாவும் கமிஷன் வழங்கப்படுகிறது. இதை 5 சதவீதம் அளவுக்கு உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கையை அரசுக்கு அமைத்த குழு நிராகரித்துவிட்டது. 

தற்போது இதை மீண்டும் வலியுறுத்தி விற்பனை மற்றும் கொள்முதல் நிறுத்த போராட்ட அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். இதற்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாட்டில் 23-ந் தேதி நள்ளிரவு முதல் பெட்ரோல் பங்க் ஸ்டிரைக் நடைபெறும் என்று சங்க தலைவர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெட்ரோல் பங்குகள் இதில் பங்கேற்கும் என்றும் கூறினார்.-DINAVIDIYAL!