HAPPY PONGAL WISHES

WELCOME TO DINAVIDIYAL...fast online tamil news network...

Friday, 13 April 2012

வடகொரியா ஏவிய ராக்கெட் நடுவானில் வெடித்துச் சிதறியது

வடகொரியாவின் நிறுவன தலைவர் 100-வது பிறந்தநாளையொட்டி அவரது நினைவாக விண்ணில் ராக்கெட்டை ஏவ வடகொரியா முடிவு செய்தது. அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்றன. 

இதற்கு ரஷியா, தென் கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஐ.நா.வால் தடை செய்யப்பட்ட நீண்ட தூரம் சென்று தாக்கும் தொழில்நுட்பத்துடன் கூடிய ஏவுகணை சோதனை நடத்தவே இந்த ராக்கெட் ஏவப்படுவதாக குற்றம் சாட்டின. இதை வடகொரியா மறுத்தது. வானிலை ஆய்வுக்காகவே அனுப்பப்படுவதாக கூறியது. 

அதே நேரத்தில், உலகநாடுகளின் எதிர்ப்பையும் மீறி ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டால் ஏவுகணை வீசி தாக்கி அழிக்கப்போவதாக ஜப்பான் மிரட்டி வந்தது. அதையும் மீறி வடகொரியா நேற்று காலை 7.40 மணி (சர்வதேச நேரப்படி நேற்று இரவு 10.40 மணிக்கு) விண்ணில் ஏவியது. 

ஆனால், வடகொரியாவின் முயற்சி தோல்வி அடைந்தது. ராக்கெட் ஏவப்பட்டதும் சீறிப்பாய்ந்தபடி விண்ணில் பறந்தது. அதே நேரத்தில், அடுத்த ஒரு நிமிடத்தில் நடுவானில் வெடித்து சிதறியது. அவற்றின் சிதறல்கள் தென்கொரியாவின் குன்சன் துறைமுகத்தில் இருந்து தென்மேற்கில் 200 கி.மீட்டர் தூரத்தில் மஞ்சள் கடலில் விழுந்தது. 

இந்த தகவலை, தென் கொரியா, அமெரிக்க மற்றும் ஜப்பான் நாடுகள் அறிவித்தன. தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடலில் விழுந்ததாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

விண்ணில் ஏவப்பட்ட 1 அல்லது 2 நிமிடத்தில் நடுவானில் வெடித்து சிதறி கடலில் விழுந்ததாக, தென் கொரியாவின் ராணுவ அமைச்சக செய்தி தொடர்பாளர் கிம் மின் சியோக் கூறியுள்ளார். 

மேலும் ராக்கெட் சிதறல்கள் வெடித்து சிதறி விழுந்த பகுதியில் வாழும் மக்கள் அங்கிருந்து வெளியேற உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் கூறினார். ராக்கெட் வெடித்து சிதறியதை ஜப்பானும் உறுதி செய்துள்ளது. ஆனால், இந்த விஷயத்திலும் வடகொரியா இதுவரை வாய் திறக்காமல் மவுனமாகவே உள்ளது.-DINAVIDIYAL!