HAPPY PONGAL WISHES

WELCOME TO DINAVIDIYAL...fast online tamil news network...

Thursday, 12 April 2012

கேரள அமைச்சரவை விரிவாக்கம் : 2 புதிய மந்திரிகள் பதவியேற்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் உம்மன்சாண்டி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி மந்திரிசபையில் மொத்தம் 19 அமைச்சர்கள் இருந்தனர். இதில் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் 4 அமைச்சர்கள் உள்ளனர். தங்களுக்கு மேலும் ஒரு அமைச்சர் பதவி வேண்டும் என்று முஸ்லிம் லீக் நீண்ட நாட்களாக காங்கிரசிடம் கோரிக்கை விடுத்து வந்தது. உணவுத் துறை அமைச்சராக இருந்த டி.எம்.ஜேக்கப் கடந்த வருடம் திடீரென மரணமடைந்தார். இதையடுத்து நடந்த இடைத்தேர்தலில் டி.எம்.ஜேக்கப்பின் மகன் அனூப் ஜேக்கப் வெற்றி பெற்றார். 

அனூப் ஜேக்கப்புக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என்று கேரளா காங்கிரஸ் (ஜே) கட்சியும் கோரிக்கை விடுத்தது. நேற்று திருவனந்தபுரத்தில் நடந்த காங்கிரஸ் கூட்டணிக் கட்சி கூட்டத்தில் முஸ்லிம் லீக் கட்சிக்கு மேலும் ஒரு அமைச்சர் பதவி வழங்க முடிவு செய்யப்பட்டது. அனூப் ஜேக்கப்புக்கும் அமைச்சர் பதவி அளிக்க தீர்மானித்திருப்பதாக கூட்டணிக் கட்சிக் கூட்டத்திற்கு பின் நேற்று இரவு முதல்வர் உம்மன்சாண்டி கூறினார்.

இந்நிலையில் இன்று காலை 10 மணியளவில் திருவனந்தபுரம் கவர்னர் மாளிகையில் நடந்த விழாவில் அனூப் ஜேக்கப்பும், முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த மஞ்சளாம்குழி அலியும் புதிய அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். கேரள கவர்னர் (பொறுப்பு) எச்.ஆர்.பரத்வாஜ் புதிய அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
-DINAVIDIYAL!