சிரியாவில் இருந்து தப்பி ஓடும் அகதிகளின் எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் மிகவும் வேகமாக அதிகரித்துள்ளதாக துருக்கிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எல்லை நகரங்களில் ஒன்றான ரெய்கன்லியில் இருந்து வரும் தகவல்களின்படி சுமார் 1000 அகதிகள் துருக்கியை வந்தடைந்துள்ளதாக தெரிகிறது. இது அண்மைய மாதங்களில் வந்த அகதிகளின் எண்ணிக்கையில் மிகவும் அதிகமாகும்.
பாதுகாப்புப் படையினர் இரு கிராமங்களில் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், வடக்கு சிரியாவில் சண்டைகள் அதிகரித்துள்ளதாக மனித உரிமை அமைப்புக்கள் கூறுகின்றன.
தலைநகர் டமாஸ்கஸுக்கு அருகேயும் மோதல்கள் நடந்திருக்கின்றன.
இதுவரை இருபதினாயிரத்துக்கும் அதிகமான மக்கள் சிரியாவில் இருந்து துருக்கியில் தஞ்சமடைந்திருக்கிறார்கள்.
அமைதி உடன்படிக்கை ஒன்றை அமல்படுத்த விளையும் நிலையில், ஐநா- அரபு லீக்கின் சிரியாவுக்கான தூதுவரான கோஃபி அனான் அவர்கள், சிரிய அரசாங்கத்தின் முக்கிய கூட்டாளி நாடான இரானுக்கு விஜயம் செய்யவுள்ளார்.
அவர் அடுத்த வாரம் அங்கு செல்வார் என்று அவரது பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.-DINAVIDIYAL!