HAPPY PONGAL WISHES

WELCOME TO DINAVIDIYAL...fast online tamil news network...

Wednesday, 11 April 2012

மும்பையை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் இன்று ஹாட்ரிக் வெற்றி பெறுமா?

மும்பை: ஐபிஎல் 5 தொடரில் இன்று நடைபெற உள்ள போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை அதன் சொந்த மண்ணில் ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் கொள்ள உள்ளது. ஐபிஎல் 5 தொடரில் 2 வெற்றிகளை பெற்றுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் இன்று மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தினால் ஹாட்ரிக் வெற்றிப் பெற முடியும்.

மும்பை இந்தியன்ஸ் அணியை பொறுத்த வரை ஹர்பஜன் சிங் கேப்டனாக நியமிக்கப்பட்ட பிறகு ஐபிஎல் 5 தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது.

ஆனால் அடுத்த போட்டியில் புனே வாரியர்ஸ் அணியிடம் தோல்வியை தழுவியது. பின்னர் 3வது போட்டியில் எழுச்சி கண்ட மும்பை இந்தியன்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ் அணியை வீழ்த்தியது.

ஆனால் ராஜஸ்தான் ராயல்ஸ் இதுவரை ஆடி உள்ள 2 போட்டிகளிலும் தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளது. இதனால் இன்றைய போட்டியிலும் வெற்றி பெற ஆவலுடன் உள்ளது.

மும்பை இந்தியன்ஸ்:

மும்பை இந்தியன்ஸ் அணி பலமான பேட்டிங் வரிசையை பெற்றுள்ளது. துவக்க வீரர்களான களமிறங்கும் ரிச்சர்டு லெவி அதிரடியாக ஆட கூடியவர். அவருக்கு சச்சின், ரோஹித் சர்மா, ராயுடு ஆகியோர் சிறந்த ஒத்துழைப்பு அளிக்கின்றனர். மேலும் கடைசி கட்டத்தில் போல்லார்டு, ஹர்பஜன் சிங் ஆகியோர் அதிரடியாக ஆடி, அணி பலமான ஸ்கோரை எட்ட உதவுகின்றனர். ஆனால் விரலில் காயமடைந்துள்ள சச்சின் இன்றைய போட்டியில் பங்கேற்பது சந்தேகம்.

பந்துவீச்சை பெறுத்த வரை கேப்டன் ஹர்பஜன் சிங், மலிங்கா, ஓஜா, போல்லார்டு என்று நீண்ட பந்துவீச்சாளர்களின் வரிசையே அணியில் உள்ளது. இவர்களின் பந்துவீச்சில் எதிரணி பேட்ஸ்மேன்கள் கதிகலங்குகின்றனர்.

ராஜஸ்தான் ராயல்ஸ்:

ராகுல் டிராவிட்டை கேப்டனாக கொண்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில், துவக்க வீரரான ரஹானே, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 98 ரன்கள் எடுத்தவர். அனுபவ வீரர் ராகுல் டிராவிட், அசோக் மேனாரியா, பிரட் ஹாட்ஜ், கூப்பர் ஆகியோரும் சிறப்பாக பேட்டிங் செய்து வருகின்றனர்.

பந்துவீச்சை பொறுத்த வரை கூப்பரின் பந்துவீச்சில் எதிரணியினர் மிரண்டு போகின்றனர். மேலும் திரிவேதி, பிரட் ஹட்ஜ் ஆகியோரும் சிறப்பாக பந்துவீசி விக்கெட்களை வீழ்த்தி வருகின்றனர்.

இதுவரை...

ஐபிஎல் தொடர்களில் மேற்கண்ட 2 அணிகளும் இதுவரை 7 முறை மோதி உள்ளன. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் 4 முறையும், மும்பை இந்தியன்ஸ் 3 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

சொந்த மண்ணில் இன்றைய போட்டி நடைபெற உள்ளதால், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரசிகர்களின் ஆதரவு அமோகமாக இருக்கும். எனினும் தொடர்ந்து வெற்றிகளை பெற்று வரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை அவ்வளவு எளிதில் மும்பை இந்தியன்ஸ் இன்று வீழ்த்த முடியாது என்பது நிச்சயம்.-DINAVIDIYAL!