இலங்கையில் சனிக்கிழமை அதிகாலை காணாமல்போன மக்கள் போராட்ட இயக்கத்தின் தலைவர் பிரேம்குமார் குணரட்ணத்தை கண்டுபிடித்துத் தருமாறு ஆஸ்திரேலிய அரசாங்கம் இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் தற்போது வசிக்கும் அவரது மனைவி டாக்டர் சம்பா சோமாரட்ண, ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்ற தனது கணவரை கண்டுபிடித்துதருமாறு ஐநாவிடமும் ஆஸ்திரேலிய அரசிடமும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
கடந்த ஆண்டு டிசம்பரில், ஜேவிபியிலிருந்து பிரிந்து உருவான மக்கள் போராட்ட இயக்கத்தினர் பல்வேறு மனித உரிமை செயற்பாட்டு போராட்டங்களை முன்னெடுத்துவந்தனர்.
இந்த அமைப்பினர் அண்மையில் உருவாக்கிய 'முன்னிலை சோசலிஸக் கட்சியினர்' ஏப்ரல் 9ம் திகதி (திங்கட்கிழமை) கட்சியின் முதலாவது மாநாட்டை நடத்த ஒழுங்கு செய்திருந்த நிலையிலேயே பிரேம்குமார் குணரட்ணமும், அந்த அமைப்பின் மகளிர் பிரிவு பொறுப்பாளர் திமுது ஆட்டிகலவும் கடத்தப்பட்டுள்ளதாக காவல்துறையிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
தான் இலங்கைக்கு வந்திருந்த போது, விமானநிலையத்தில் 18 மணிநேரம் தடுத்துவைக்கப்பட்டு, தனது கணவரின் இருப்பிடம் உள்ளிட்ட விபரங்கள் குறித்து கடுமையாக விசாரிக்கப்பட்டதாக டாக்டர் சம்பா குணரட்ணம் பிபிசியிடம் கூறினார்.
இதற்கிடையே, குமார் குணரட்ணத்தின் உறவினர்களும் அவரது கட்சி உறுப்பினர்களும் கொழும்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தியிருந்தார்கள்.
'குமார் குணரட்ணத்தின் சகோதரர் ரஞ்சிதம் குணரட்ணம் 1989 இல் படுகொலை செய்யப்பட்டார்'
குமார் குணரட்ணம் அரச படைகளாலேயே கடத்தப்பட்டிருக்கலாம் என்று அவரது தாயார் வீஆர் குணரட்ணமும், அவரது சகோதரி நிரஞ்சனி குணரட்ணமும் தமிழோசையிடம் கூறினார்கள்.
ஆனால் இந்தக் குற்றச்சாட்டை இலங்கை அரசின் பாதுகாப்பு விவகாரங்களுக்காக பேசவல்ல அதிகாரி லக்ஷ்மன் ஹுலுகல்ல மறுத்தார்.
இலங்கை காவல்துறையினர் காணாமல்போனவர்கள் தொடர்பில் விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் பிபிசியிடம் கூறினார்.
இதேவேளை, காணாமல்போனவர்களின் குடும்பங்கள் சார்பில் போராட்டமொன்றை ஒழுங்கு செய்ய சென்றிருந்த போது, மக்கள் போராட்ட இயக்கத்தைச் சேர்ந்த குகன் முருகானந்தம் மற்றும் லலித்குமார் வீரராஜ் ஆகியோர் யாழ்ப்பாணத்தில் காணாமல் போயிருந்தார்கள்.
அவர்கள் இலங்கைப் படையினரின் தடுப்பில் இல்லை என்று நீதிமன்றத்தில் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.-DINAVIDIYAL!