-DINAVIDIYAL!
இலங்கையில் ஜேவிபி கட்சியிலிருந்து பிரிந்து நான்கு மாதங்களுக்கு முன்னர் மக்கள் போராட்ட இயக்கம் என்ற குழுவை ஆரம்பித்த பிரேமகுமார் குணரட்ணம் என்பவரும் அந்த அமைப்பின் மகளிர் பிரிவு தலைவியான திமுது ஆட்டிகல என்பவரும் காணாமல்போயிருப்பதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் கைதுசெய்யப்பட்டிருக்கலாம் என்று அந்த இயக்கத்தின் பேச்சாளர்கள் தமிழோசையிடம் கூறினர்.
தொடர்புடைய விடயங்கள்
பிரேமகுமார் குணரட்ணம், கொழும்பின் புறநகர்பகுதியான கிரிபத்கொடையில் தங்கியிருந்த வீட்டிலிருந்து நேற்று வெள்ளிக்கிழமை இரவு அல்லது இன்று சனிக்கிழமை அதிகாலை பலாத்காரமாக கொண்டு செல்லப்பட்டுள்ளதாக மக்கள் போராட்ட இயக்கத்தின் பேச்சாளர் புபுது ஜயகொட தமிழோசையிடம் கூறினார்.
வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணியளவில் இயக்கத்தின் மகளிர் பிரிவுக்கும் சர்வதேச நடவடிக்கைகளுக்கும் பொறுப்பாக இருந்த திமுது ஆட்டிகல, பஸ்ஸொன்றில் வீடுநோக்கிச் சென்றதாகவும் அதன்பின்னர், தகவல்கள் எதுவும் இல்லை என்றும் உறவினர்கள் காவல்துறையிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
மக்கள் போராட்ட இயக்கத்தின் சார்பில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள முன்னணி சோசலிஸக் கட்சி என்ற புதிய கட்சியின் மாநாட்டை வரும் திங்கட்கிழமை நடத்தத் திட்டமிட்டிருந்த நிலையிலேயே இந்தக் கடத்தல்கள் நடந்துள்ளதாக அந்த இயக்கத்தின் பேச்சாளர் கூறினார்.
யுத்தகாலத்தில் காணாமல் போனவர்களின் குடும்பங்களின் சார்பில் யாழ்ப்பாணத்தில் போராட்டமொன்றை ஒழுங்கு செய்ய சென்றிருந்தபோது லலித் வீரராஜ் என்பவரும் குகன் முருகானந்தன் என்பவரும் ஏற்கனவே கடந்த டிசம்பர் மாதத்தில் காணாமல்போனமை குறிப்பிடத்தக்கது.