HAPPY PONGAL WISHES

WELCOME TO DINAVIDIYAL...fast online tamil news network...

Thursday, 12 April 2012

மத்திய அரசு மீது ஜெயலலிதா சாடல்

மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்கும் வகையில் இந்திய மத்திய அரசு நடந்து கொள்வதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா மீண்டும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மத்திய அரசின் தேசிய சுகாதார ஆணைய மசோதா மாநிலங்கள் அவையின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் நிலைக்குழுவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள நிலையில், அந்த மசோதாவுக்கான தனது எதிர்ப்பை தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மன்மோகன் சிங்குக்கு வியாழக்கிழமை(12.4.12) எழுதியுள்ள கடிதத்தில், அந்த மசோதாவுக்கு தனது கடுமையான ஆட்சேபத்தை பதிவு செய்வதாக கூறியுள்ளார்.
இந்த புதிய மசோதாவானது மருத்துவம், பல் மருத்துவம் மற்றும் பிற மருத்துவ கல்வி சார்ந்த முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தை 25 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழுவிடம் ஒப்படைக்க வழி செய்கிறது என்றும், அந்த உறுப்பினர்கள் அனைவருமே மத்திய அரசால் நியமிக்கப்படுபவர்கள் என்றும் தனது கடிதத்தில் ஜெயலலிதா சுட்டிக்காட்டியுள்ளார்.
இப்படியான நடவடிக்கை மாநில அரசுகளின் அதிகாரத்தை பறிக்கும் ஒரு செயலாகும் எனவும் அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் இந்த மசோதா மூலம் சுகாதார பணியாளர்களின் தேவைகள் குறித்த திட்டமிடல், மருத்துவகல்விக்கான பாடத் திட்டம, பாட முறை மற்றும் மருத்துவம் சார்ந்த பிரிவுகளில் பாடத் திட்டங்களை வழங்கும் புதிய கல்வி நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குதல் ஆகியவற்றில் மாநில அரசுக்கு எந்த பங்கும் இல்லாமல் ஆகிவிடும் எனவும் அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
தேவை அடிப்படையிலான மருத்துவ, பல் மருத்துவ மற்றும் மருத்துவ துறை சார்ந்த பணியாளர் திட்டமிடல் என்பது பிராந்திய மற்றும் உள்ளூர் நலன், தேவை சார்ந்தே அமைய வேண்டும். திட்டங்களை வகுக்கும் அமைப்புகளில் மாநிலங்களுக்கு போதுமான பிரதிநிதித்துவம் இருந்தால் மட்டுமே இது சாத்தியம். ஏற்கனவே உள்ள தேசிய மற்றும் மாநில கவுன்சில்கள் தொடர்பாக தற்போதுள்ள நிலையே தொடர்ந்து பின்பற்றப்பட வேண்டும் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என்று ஜெயலலிதா தனது பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

தேசிய கவுன்சில் அளவில் மாநிலங்களில் அதிகரித்த பங்களிப்போடு இவற்றை மேலும் மேம்படுத்தவும், வலுவாக்கவும் முடியும் என்று தான் நம்புவதாகவும் தமிழக முதல்வர் எழுதியுள்ளார்
கூட்டாட்சி தத்துவத்தின் ஆணி வேரையே அசைக்கும் வகையில் புதிய அமைப்புகளை உருவாக்குவதன் மூலம் முக்கியத்துவம் வாய்ந்த சுகாதார மனிதவள துறையில், மாநிலங்களின் அதிகாரத்தை பறிக்கும் இந்த தேசிய சுகாதார மனிதவள ஆணைய மசோதாவுக்கு எனது கடுமையான எதிர்ப்பை தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் ஜெயலலிதா மன்மோகன் சிங்குக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார் 
-DINAVIDIYAL!