மியான்மரில் தேசிய ஜனநாயக லீக் கட்சி போட்டியிட்ட 44 இடங்களில் 43-ஐ கைப்பற்றியுள்ளது என அந்நாட்டின் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது. கீழவையில் 440 உறுப்பினர்களும் மேலவையில் 224 உறுப்பினர்களையும் கொண்டது மியான்மர் நாடாளுமன்றம். அதில் அதிபர் தெய்ன் செயின் சார்ந்துள்ள கட்சிக்கு 348 இடங்கள் உள்ளன. இதில் 166 பேர் தற்போது சேவைபுரியும் ராணுவ அதிகாரிகள் என்கின்ற நிலையில், இந்த 43 உறுப்பினர்கள் எந்த ஒரு பெரிய எதிர்ப்பையும் காட்டிவிட முடியாது. எந்தத் தீர்மானத்தையும் நிறுத்திவிடவும் முடியாது. ஆனால், இவர்கள் அங்கே பேசுவன யாவும் மக்கள் கருத்தாக பிரதிபலிக்கும். அரசை முள்முனையில் நிறுத்தி வைக்கும்.
மியான்மர் நாடாளுமன்றத்தில் ஆங் சான் சூச்சி நுழைந்திருப்பதே மிகப் பெரிய வெற்றியாக, சர்வாதிகாரப் பனிமலை உடையத் தொடங்குவதன் முன்னோட்டமாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், இந்தப் பனிமலை 2010-லேயே உருகத் தொடங்கிவிட்டது என்பதுதான் உண்மை.
இருபது ஆண்டுகளுக்குப் பிறகு மியான்மரில் 2010, நவம்பரில் நடைபெற்ற தேர்தலில் ஆங் சான் சூச்சியைப் பங்கேற்க முடியாத நிலைக்குத் தள்ளிய ராணுவப் பின்புலம் கொண்ட ஒன்றிய ஒற்றுமை மற்றும் மேம்பாட்டுக் கட்சி, ஆங் சான் சூச்சியை வீட்டுச் சிறையிலேயே வைத்திருக்கும் என்ற எதிர்பார்ப்புக்கு மாறாக அவரை வீட்டுச் சிறையிலிருந்து விடுவித்தது. ராணுவம் தன் இறுக்கத்தைத் தளர்த்திக் கொண்ட முதல் நடவடிக்கை இதுதான்.
இதைத் தொடர்ந்து அதிபர் தெய்ன் செயின் அக்டோபர் மாதத்தில் ஆங் சான் சூச்சியை அதிகாரப்பூர்வமாகச் சந்தித்துப் பேசினார். அதைத் தொடர்ந்து பல ஆண்டுகளாகச் சிறையில் அடைபட்டிருந்த 200-க்கும் மேற்பட்ட கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். அதே மாதம் தொழிலாளர் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டு, தொழிலாளர் சங்கம் அமைக்க வகை செய்தது அரசு. தேசிய ஜனநாயக லீக் தன்னை அரசியல் கட்சியாகப் பதிவு செய்துகொள்ளவும் அனுமதித்தது.
அப்போது மியான்மர் அரசுக்கும், போராட்டம் நடத்திவரும் இனவாதக் குழுக்களுக்கும் இடையே நடுவராகச் செயல்பட்டு, பிரச்னைக்கு தீர்வு காண விருப்பம் தெரிவித்தார் ஆங் சான் சூச்சி. அதையடுத்து கரேன் என்ற இனவாதப் போராளிகளுடன் போர் ஓய்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியது. 1988-ல் நடைபெற்ற மாணவர் கலவரத்தில் கைதான முக்கிய நபர்கள், 2007-ல் மத அடையாளத்துக்காகப் போராட்டம் நடத்தி கைதான துறவியர்கள் அனைவரும் 2011 ஜனவரியில் எந்த நிபந்தனையும் இல்லாமல் விடுவிக்கப்பட்டனர். 38,000 கைதிகளுக்குத் தண்டனை குறைக்கப்பட்டு, 6,656 பேர் விடுதலையுமாகின்றனர்.
ராணுவப் பின்புலம் இருந்தாலும், மக்கள் ஆதரவு இல்லாமல் நாடாளுதல் சாத்தியமே இல்லை என்பதைப் புரிந்துகொண்ட மியான்மர் அரசு ஜனநாயகப் பாதைக்குத் திரும்பத் தொடங்கிவிட்டதற்கான முன்னோட்டம்தான் அவையெல்லாம்.
ஆங் சான் சூச்சியின் இத்தேர்தல் வெற்றி, மியான்மரின் ஜனநாயகப் பாதையை மேலும் அகலப்படுத்தியிருக்கிறது. இன்றைய உலகில் ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது அதை உலக அரங்கில் மற்றவர்களால் மதிக்கப்படும் நிலையைப் பொறுத்ததுதான் என்பதை மியான்மர் ராணுவ அரசு பன்நெடுநாள் கழித்து உணர்ந்துகொண்டிருக்கிறது. ராணுவ ஆட்சி என்கின்ற சொல்லாடலே பல நாடுகளை எட்டி நிற்கச் செய்வதைக் கண்டு, தன்னை ஜனநாயகப் பாதையில் இணைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தை வேறுவழியின்றி ஏற்றுக்கொண்டிருக்கிறது மியான்மர் அரசு.
இந்தத் தேர்தலில் சில இடங்களில் தவறுகள் நடந்ததாகப் புகார்கள் எழுந்தாலும்கூட, நேர்மையாகவும், சுதந்திரமாகவும் தேர்தல் நடைபெற்றுள்ளது. சர்வதேசப் பார்வையாளர்கள் பத்திரிகையாளர்கள் இந்தத் தேர்தலைப் பார்த்து கருத்துச் சொல்ல அனுமதிக்கப்பட்டார்கள். இதில் இந்தியத் தேர்தல் ஆணையத்தைச் சேர்ந்த இரு அதிகாரிகளும்கூட மியான்மர் சென்றிருந்தார்கள்.
வெறும் 43 பேரின் வெற்றி என்ன செய்துவிட முடியும் என்றால், அது மியான்மரின் தோற்றத்தை மாற்றிக் காட்டும் என்பதுதான் பதில். இந்த வெற்றி வந்த அடுத்த நாளே, "இதுநாள் வரை நிலவிய வர்த்தகத் தடைகள் விலக்கிக் கொள்ளப்படும்' என்கிறார் ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக ஆணையர். ஒருபுறம் அமெரிக்கா வரவேற்கிறது. இங்கே இந்தியா வாழ்த்துகிறது. இந்தியப் பிரதமர், அரசுப் பயணமாக மியான்மர் செல்லப் போவதாக அறிவிக்கிறார். இவையாவும் மியான்மர் வளர்ச்சிக்குத் தேவையானவை.
ஆங் சான் சூச்சியின் வெற்றிக்குப் பாராட்டு தெரிவிக்கும் அதேவேளையில், கடந்த இரு ஆண்டுகளாக இறுக்கத்தை மெல்லத் தளர்த்தி, கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதுபோல, இந்த அளவுக்கு ஜனநாயகத்துக்கு சிறிய அளவில் வழியைத் திறந்துவைத்திருக்கும் ஆளும்கட்சியையும் அதிபர் தெய்ன் செயினையும் பாராட்டத்தான் வேண்டும்.
இந்தியாவைப் பொறுத்தவரை மியான்மரில் ஜனநாயகம் மலர்வது என்பது நமது வளர்ச்சிக்கும், பாதுகாப்புக்கும்கூடப் பல வகையில் உதவும். பிரிட்டிஷ் காலனியாக இருக்கும்போது இந்தியாவும் மியான்மரும் இணைந்திருந்த அனுபவம் உண்டு. நமது அண்டை நாடுகளில் மக்களாட்சி முறையாக நடைபெறும்போதுதான் நாம் இரு நாடுகளுக்கு இடையே இருக்கும் பிரச்னைகளைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ள ஏதுவாகும் என்கிற வகையில், மியான்மரில் மக்களாட்சி மலர்வதை ஒவ்வோர் இந்தியனும் மகிழ்ச்சியுடன் வரவேற்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.
பன்னெடுங்காலமாக வீட்டுச் சிறையில் இருந்தபடி அரசியல் நடத்தி, அதையும் காந்திய வழியில் அமைதிப் புரட்சியாகக் கொண்டு சென்ற ஆங் சான் சூச்சி என்ற தனியொரு பெண்மணியின் வெற்றியை, உலக மக்கள் தங்களது சொந்த வெற்றியாக மகிழ்ச்சி கொள்ளக் காரணம் இருக்கிறது. வேறுள குழுவையெல்லாம் மானுடம் வென்றதம்மா!-DINAVIDIYAL!