பாட்னா : இந்திய ஜனநாயகம் பலமாக உள்ளது. பாகிஸ்தான் போன்ற நிலைமை இந்தியாவில் இல்லை என்பதால் ராணுவ புரட்சி ஏற்படாது என்று ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் கருத்து தெரிவித்துள்ளார்.
ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் பாட்னாவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கடந்த ஜனவரி மாதம் டெல்லியை நோக்கி ராணுவத்தின் 2 படைப் பிரிவுகள் நகர்ந்துள்ளன. இது மிகவும் ரகசியமாக நடந்துள்ளது. இதனால், ராணுவ புரட்சி ஏற்படப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இது தேவையற்ற சர்ச்சை. இந்தியாவில் ஜனநாயகம் பலமாக உள்ளது. பாகிஸ்தானில் உள்ளது போன்ற சூழ்நிலை இந்தியாவில் இல்லை. அரசுக்கும், ராணுவத்துக்கும் இடையே மோதல் ஏற்படாது. இதனால் ராணுவ புரட்சி ஏற்பட வாய்ப்பு இல்லை.
யோகா குரு ராம் தேவின் நான் மன்னிப்பு கேட்டதாக வெளியான செய்தியில் உண்மையில்லை. எதற்காக அவரிடம் நான் மன்னிப்பு கேட்க வேண்டும். என் மகள் திருமணத்துக்கு வரும்படி அழைப்பதற்காகவே அவரிடம் தொலைபேசியில் பேசினேன். ராம்தேவின் போராட்டம் ஏற்கனவே தோல்வி அடைந்த நிலையில், கறுப்பு பணத்துக்கு எதிராக அவர் நடத்தும் போராட்டத்தில் நான் சேருவது என்ற கேள்வியே எழவில்லை.
பீகாரில் நடந்துள்ள முறைகேடுகளை மத்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி (சி.ஏ.ஜி) தனது அறிக்கையில் அம்பலப்படுத்தி உள்ளார். இந்த விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணைக்கு பீகார் முதல்வர் நிதிஷ் குமார் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு லாலு பிரசாத் கூறினார்.-DINAVIDIYAL!