HAPPY PONGAL WISHES

WELCOME TO DINAVIDIYAL...fast online tamil news network...

Thursday, 12 April 2012

நான் எதற்காக ராஜினாமா செய்ய வேண்டும்? - எஸ்ஏ சந்திரசேகரன்

தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்யப் போவதில்லை. தமிழ் சினிமா வளர்ச்சிக்காக பாடுபடும் நான் எதற்காக ராஜினாமா செய்ய வேண்டும்?, என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கும் சினிமா தொழிலாளர் சங்கமான பெப்சிக்கும் இடையே ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையில் மோதல் நீடித்து வருகிறது.

தமிழக அரசு தலையிட்டதால், அமைச்சர் முன்னிலையில் சுமூகமாகப் போகிறோம் என்று உறுதியளித்துவிட்டு வந்த தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள், அங்கிருந்து வந்த சில மணி நேரங்களுக்குள் தங்கள் வாக்கைக் காப்பாற்றத் தவறியுள்ளனர்.

இன்னொரு பக்கம், இப்போது தங்கள் தலைவராக உள்ள எஸ் ஏ சந்திரசேகரனுக்கு எதிராக, 20 பேர் கூண்டோடு ராஜினாமா செய்து போட்டி அமைப்பையும் ஏற்படுத்தியுள்ளனர்.

பெப்சியை உடைத்து, புதிய சங்கம் உருவாக்க முயன்ற தயாரிப்பாளர்களே இப்போது பிளவுபட்டு நிற்கின்றனர்.

பெப்சியுடன் சம்பள பேச்சுவார்த்தையை நடத்தமாட்டோம் என்றும், தயாரிப்பாளர் சங்கத்துக்கு விரைவில் தேர்தல் நடத்தி புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் போட்டி அமைப்பினர் அறிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு அக்டோபர் 9-ம் தேதிதான் சங்கத்துக்கு தேர்தல் நடந்து, அதில் எஸ்ஏ சந்திரசேகரன் தலைவராக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது அதிருப்தி கோஷ்டியினர் தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுவை கூட்ட முடிவு செய்துள்ளனர். இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாதம் முதல் வாரத்தில் பொதுக்குழுவை கூட்டுகிறார்கள். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும் என்று அறிவித்துள்ளனர்.

ஆனால் இந்த போட்டி அணியே செல்லாது என்று அறிவித்துள்ளார் சங்கத்தின் தலைவர் எஸ் ஏ சந்திரசேகரன்.

"செயற்குழுவை கூட்டுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பே அறிவிப்பு வெளியிட வேண்டும். ஆனால் ஒரு மணி நேரத்தில் செயற்குழுவை கூட்டி அட்ஹாக் கமிட்டி அமைக்க முடிவு செய்துள்ளனர். இது சட்டப்படி செல்லாது.

தேர்தல் மூலம் முறைப்படி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட என்னை நீக்கும் அதிகாரம் இந்த போட்டிக் குழுவுக்கு இல்லை. என் பதவிக்காலம் முழுவதும் பதவியில் இருப்பேன். தமிழ் சினிமாவுக்கு நல்லது செய்வேன்," என்றார். 
-DINAVIDIYAL!