சென்னை: தமிழகம் முழுவதும் பொறியியல் செமஸ்டர் தேர்வுகள், மூன்றாவது முறையாக ஜூன் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இதனால், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை, கோவை ஆகிய ஐந்து இடங்களில் தனித்தனியாக இயங்கி வந்த அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களை, சென்னை அண்ணா பல்கலையுடன் இணைத்ததில் இருந்து, பல்வேறு பிரச்னைகள் நடந்து வருகின்றன.
ஒவ்வொரு பல்கலையிலும், ஒவ்வொரு பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த நிலையில், திடீரென ஒரே பல்கலையின் கீழ் இணைத்தது, நிர்வாக ரீதியாக பல்வேறு கடும் சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இணைப்பு காரணமாக, மாநிலம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்குத் தேர்வு நடத்தும் பொறுப்பு, சென்னை அண்ணா பல்கலைக்கு வந்துள்ளது.
மாணவர்களைப் பற்றிய விவரங்கள், பாடத்திட்டங்கள் என எதுவுமே சரியான முறையில் கிடைக்காததால், தேர்வுகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த 3,4,5 ஆகிய தேதிகளில் நடக்க வேண்டிய செமஸ்டர் தேர்வுகள், வரும் 28,29,30 ஆகிய தேதிகளுக்கு தள்ளிவைக்கப்பட்டிருந்தன. இப்போது, இந்த தேதிகளும் மாற்றப்பட்டு, ஜூன் 7,8,9 ஆகிய தேதிகளில் நடைபெறும் என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது. இதனால் மாணவர்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
குறிப்பாக, இறுதியாண்டு படிக்கும் மாணவர்களில் பலர், "கேம்பஸ் தேர்வு" மூலம், பல நிறுவனங்களில் சேர நியமன உத்தரவு பெற்றுள்ளனர். இவர்கள் படிப்பை முடித்ததும், குறிப்பிட்ட காலத்தில், சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் வேலையில் சேர்ந்தாக வேண்டும். ஆனால், இப்படிக் கடைசி நேரத்தில் செமஸ்டர் தேர்வுகளைத் தள்ளி வைத்துக்கொண்டே இருப்பதால், அவர்கள் குறிப்பிட்ட காலத்தில் படிப்பை முடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.-DINAVIDIYAL!