புதுடில்லி: ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பிரணாப் முகர்ஜியை, திரிணமுல் காங்., தலைவர் மம்தா பானர்ஜி ஆதரிப்பார்; அவர் இன்னமும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் தான் இருக்கிறார் என, பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
மெக்சிகோ, பிரேசில் நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட பிரதமர் மன்மோகன் சிங், சிறப்பு விமானத்தில், டில்லி திரும்பும் வழியில், நிருபர்களிடம் கூறியதாவது: இந்திய பொருளாதாரத்தின் மந்த நிலை குறித்து கவலை கொள்ளத் தேவையில்லை. பொருளாதாரத்தை மேம்படுத்த, மத்திய அரசு எல்லாவிதமான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, படிப்படியாக மீட்சியடையும். பொருளாதார பிரச்னையிலிருந்து மீள, எல்லா அரசியல் கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும். ஜனாதிபதி தேர்தலில், பிரணாப் முகர்ஜியை, திரிணமுல் காங்., தலைவர் மம்தா ஆதரிப்பார்; அவர் இன்னும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் தான் தொடருகிறார். மத்திய அமைச்சரவை மாற்றம் குறித்து, விரைவில் அறிவிக்கப்படும். இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
-DINAVIDIYAL!