HAPPY PONGAL WISHES

WELCOME TO DINAVIDIYAL...fast online tamil news network...

Monday, 7 May 2012

கடைசி பந்தில் சென்னைக்கு அடி: மும்பை அணிக்கு திரில் வெற்றி: சச்சின், ரோகித் சர்மா விளாசல்

மும்பை: ஐ.பி.எல்., பரபரப்பான லீக் போட்டியின் கடைசி பந்தில், டுவைன் ஸ்மித் ஒரு "சூப்பர்' பவுண்டரி அடிக்க, மும்பை இந்தியன்ஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் "திரில்' வெற்றி பெற்றது. சென்னை அணியின் போராட்டம் வீணானது. சச்சின்(74), ரோகித் சர்மாவின்(60) அசத்தல் ஆட்டமும் மும்பைக்கு கைகொடுத்தது.
மும்பையில் நேற்று நடந்த ஐந்தாவது ஐ.பி.எல்., தொடரின் 49வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. "டாஸ்' வென்ற மும்பை கேப்டன் ஹர்பஜன், "பீல்டிங்' தேர்வு செய்தார்.
விஜய் விளாசல்:
சென்னை அணிக்கு முரளி விஜய், டுபிளசி சேர்ந்து அசத்தல் துவக்கம் தந்தனர். ராபின் பீட்டர்சன் வீசிய முதல் பந்தையே பவுண்டரிக்கு விரட்டினார் விஜய். தொடர்ந்து வெளுத்து வாங்கிய இவர், முனாப் படேலின் 2வது ஓவரில் மூன்று இமாலய சிக்சர், ஒரு பவுண்டரி அடிக்க மொத்தம் 24 ரன்கள் எடுக்கப்பட்டன. பின் மலிங்காவின் பந்தை அடித்த விஜய் ஒரு ரன்னுக்கு அழைத்தார். டுபிளசி பாதி தூரம் ஓடி வந்த நிலையில், "நோ' சொன்னார். மீண்டும் "கீரிசு'க்கு திரும்புவதற்குள் ஆர்.பி.சிங்கின் துல்லிய "த்ரோ'வில் டுபிளசி(9) பரிதாபமாக ரன் அவுட்டானார். சிறிது நேரத்தில் ஆர்.பி.சிங் பந்தில் விஜய் 41 ரன்களுக்கு(4 பவுண்டரி, 3 சிக்சர்) போல்டானார்.
ரெய்னா அதிரடி:
அடுத்து வந்த சுரேஷ் ரெய்னா ரன்வேகம் குறையாமல் பார்த்துக் கொண்டார். டுவைன் ஸ்மித் பந்துவீச்சில் இரண்டு சிக்சர், இரண்டு பவுண்டரி அடித்தார். இவர் 36 ரன்களுக்கு பிராங்க்ளின் பந்தில் ஆர்.பி.சிங்கின் அசத்தல் "கேட்ச்சில்' அவுட்டானார்.
அசத்தல் ஜோடி:
பின் கேப்டன் தோனி, பிராவோ சேர்ந்து பொறுப்பாக ஆடினர். பீட்டர்சன் ஓவரில் தோனி ஒரு சிக்சர், பவுண்டரி அடித்தார். மறுபக்கம் முனாப் பந்தை சிக்சருக்கு அனுப்பினார் பிரோவா. தொடர்ந்து மலிங்கா ஓவரில் வரிசையாக இரண்டு பவுண்டரி அடித்த பிராவோ(40), அடுத்த பந்தில் போல்டானார். ஆர்.பி.சிங் வீசிய போட்டியின் 19வது ஓவரில் தோனி(25), ஆல்பி மார்கல்(3) அவுட்டாக, ரன் வேகம் குறைந்தது.
மலிங்கா துல்லியம்:
கடைசி ஓவரை துல்லியமாக வீசிய மலிங்கா, ரவிந்திர ஜடேஜா(9), அஷ்வினை(0) வெளியேற்றியதோடு, 4 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து திருப்புமுனை ஏற்படுத்தினார். சென்னை அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 173 ரன்கள் எடுத்தது. பத்ரிநாத்(1) அவுட்டாகாமல் இருந்தார்.
மும்பை சார்பில் ஆர்.பி.சிங், மலிங்கா தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
சச்சின் விஸ்வரூபம்:
சவாலான இலக்கை விரட்டிய மும்பை அணி துவக்கத்தில் திணறியது. ஹில்பெனாஸ் வீசிய முதல் ஓவரில் பிராங்க்ளின் திணற, "மெய்டனாக' அமைந்தது. இவரது அடுத்த ஓவரில் "ஆமை வேக' பிராங்க்ளின்(1 ரன், 9 பந்து) அவுட்டானார். பின் சச்சின், ரோகித் சர்மா இணைந்து தூள் கிளப்பினர். இவர்கள், சென்னை பந்துவீச்சை துவம்சம் செய்ய, கேப்டன் தோனி செய்வதறியாது விழித்தார். ஆல்பி மார்கல் வீசிய போட்டியின் 11வது ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசிய சச்சின், ஐ.பி.எல்., அரங்கில் தனது 11வது அரைசதம் கடந்தார். இவர், ஜகாதி ஓவரில் வரிசையாக 2 பவுண்டரி அடிக்க, உள்ளூர் மும்பை ரசிகர்கள் உற்சாகத்தின் உச்சிக்கே சென்றனர்.
விக்கெட் சரிவு:
அஷ்வின் பந்தை இறங்கி வந்து அடித்த சச்சின் 74 ரன்களுக்கு(44 பந்து, 11 பவுண்டரி, 1 சிக்சர்) டுபிளசியின் கலக்கல் "கேட்ச்சில்' அவுட்டானார். அடுத்து வந்த தினேஷ் கார்த்திக் (11) ஏமாற்றினார். இந்த நேரத்தில் 18வது ஓவரை வீசிய ரவிந்திர ஜடேஜா இரட்டை "அடி' கொடுத்தார். 3வது பந்தில் ராயுடுவை(0) போல்டாக்கினார். 6வது பந்தில் ரோகித் சர்மாவையும்(60) போல்டாக்கி அசத்தினார். பிராவோ வீசிய அடுத்த ஓவரில் ராபின் பீட்டர்சன்(0), ஹர்பஜன்(0) வெளியேற, போட்டியில் சூடு பிடித்தது.
சொதப்பல் ஓவர்:
கடைசி ஓவரில் மும்பை வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டன. ஹில்பெனாஸ் சொதப்பலாக பந்துவீசினார். முதல் பந்தில் ஒரு ரன். 2வது பந்தில் மலிங்கா(0) போல்டானார். 3வதுபந்தில் ஒரு ரன். 4வது பந்தில் டுவைன் ஸ்மித் "சிக்சர்' அடிக்க, "டென்ஷன்' ஏற்பட்டது. 5வது பந்தில் பவுண்டரி.6வது பந்திலும் ஸ்மித் ஒரு பவுண்டரி அடிக்க, மும்பை அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 174 ரன்கள் எடுத்து, சென்னைக்கு எதிராக மீண்டும் வெற்றி பெற்றது. ஸ்மித்(24), ஆர்.பி.சிங்(1) அவுட்டாகாமல் இருந்தனர்.
ஆட்ட நாயகன் விருதை டுவைன் ஸ்மித் வென்றார்.
"வில்லன்' ஹில்பெனாஸ்
சென்னை அணிக்கு "வில்லனாக' மாறினார் ஹில்பெனாஸ். முதல் ஓவரை "மெய்டனாக' வீசிய இவர், முக்கியமான கடைசி ஓவரில் "யார்க்கர்' வீச தவறினார். இதனை பயன்படுத்திய மும்பை வீரர் டுவைன் ஸ்மித் ஒரு சிக்சர், 2 பவுண்டரி அடித்து "ஹீரோவாக' ஜொலித்தார்.
தோனி முடிவு சரியா
நேற்று 18வது ஓவரை வீசிய ரவிந்திர ஜடேஜா 2 விக்கெட் வீழ்த்தியதோடு 2 ரன் மட்டுமே விட்டுக் கொடுத்தார். களத்தில் சுழற்பந்துவீச்சு பற்றி அதிகம் தெரியாத டுவைன் ஸ்மித் இருந்த நிலையில், ஜடேஜா அல்லது ஜகாதிக்கு தோனி வாய்ப்பு அளித்திருக்கலாம். மாறாக வேகப்பந்துவீச்சாளரான ஹில்பெனாஸ் கையில் பந்தை கொடுத்து மாபெரும் தவறு செய்தார்.
பெட்டிங் "ஜோர்'
நேற்றைய போட்டியில் கடைசி பந்து வரை முடிவு இழுபறியாக இருந்ததால், கிரிக்கெட் சூதாட்ட புள்ளிகளுக்கு "ஜாக்பாட்' அடித்திருக்கும். யார் வெற்றி பெறுவார்கள் என்று சரியாக கணிக்க தெரியாமல், தவறாக "பெட்' கட்டியவர்கள் பெரும் இழப்பை சந்தித்திருக்கலாம். 

-DINAVIDIYAL!