கோவை: வரும் ஜூலை 7ல் நடக்கும் குரூப்- 4 தேர்வு முடிவுகள், 40 நாட்களுக்குள் வெளியிடப்படும். தேர்வானவர்களுக்கு, கவுன்சிலிங் வாயிலாக பணி நியமன ஆணைகள், 15 நாட்களில் வழங்கப்படும் என டி.என்.பி.எஸ்.சி., தலைவர் நடராஜ் தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.,), குரூப்- 4 தேர்வுகள், ஜூலை 7ம் தேதி நடக்கின்றன. மண்டல அளவிலான தேர்வு ஏற்பாடுகள் குறித்து, ஆணைய தலைவர் நடராஜ், கோவையில் நேற்று, மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பின், செய்தியார்களிடம் அவர் கூறியதாவது: தமிழகம் முழுவதும், மொத்தம் 244 இடங்களில், 5,000 மையங்களில், குரூப்- 4 தேர்வுகள் நடக்கின்றன. 10 ஆயிரத்து 793 பணியிடங்களுக்கு, 12 லட்சத்து 50 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
தர்மபுரி மாவட்டத்தில் இருந்து, அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளன. மாநிலத்தில், அதிகளவில் சேலம் மாவட்டத்தில், 1,013 மாற்றுத் திறனாளிகள் தேர்வு எழுத உள்ளனர். இவர்கள் தேர்வு எழுத வசதியாக, மையங்களின் கீழ் தளங்களில், சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்.
தேர்வு மையங்களில், வினாத்தாள் வினியோகம் முதற்கொண்டு, அனைத்து நடவடிக்கைகளும், வீடியோவில் பதிவு செய்யப்படும். தேர்வு எழுதிய 40 நாட்களுக்குள், முடிவுகள் வெளியிடப்படும். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, கவுன்சிலிங் மூலம், 15 நாட்களுக்குள் பணி நியமனம் அளிக்கப்படும். கவுன்சிலிங் நடவடிக்கைகள் தொடர்பாக, அண்ணா பல்கலையின் உதவி கோரப்பட்டுள்ளது. அடுத்த தேர்வு நடந்து, முடிவு அறிவிக்கும் வரை, காத்திருப்போர் பட்டியல் பராமரிக்கப்படும்.
குரூப்- 2 தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம், 3,663 பணியிடங்களுக்கு, ஒரு நாளைக்கு, 5,000 விண்ணப்பங்கள், இணையம் வாயிலாக வருகின்றன. மொத்தம், ஐந்து லட்சம் விண்ணப்பங்கள் வரும் என எதிர்பார்க்கிறோம். இதற்கு அடுத்தபடியாக, 1,300 வி.ஏ.ஓ., பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது. இதில், 15 லட்சம் விண்ணப்பங்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் செப்டம்பர் மாதத்துக்குள், முக்கிய தேர்வுகள் நடக்க உள்ளன என்று நடராஜ் கூறினார்.
டி.என்.பி.எஸ்.சி., தலைவர் நடராஜ் மேலும் கூறியதாவது: குறிப்பிட்ட பணியிடங்களுக்கு, ஓராண்டிற்கு, ஒரு தேர்வு என்ற நடைமுறை கிடையாது. தேவைப்பட்டால், கூடுதல் தேர்வுகள் நடத்தப்படும். காலிப் பணியிடங்கள் குறித்த பட்டியல் தரப்பட்டால், அதற்கு ஏற்றவாறு, தேர்வுகள் குறித்து அறிவிக்கப்படும்.
குரூப்- 4 தேர்வுக்கு, முதலில், 3,000 காலிப் பணியிடங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டன. நாங்கள் முயற்சி எடுத்து, அனைத்து அரசு துறைகளிடமும் பட்டியல் பெற்று, தற்போது, 10 ஆயிரத்து 793 பணியிடங்களை நிரப்ப, தேர்வு நடத்துகிறோம். குரூப்- 2 தேர்விலும், முதலில் 1,615 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு, தற்போது, 3,663 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
நான் பொறுப்பேற்ற பின், டி.என்.பி.எஸ்.சி., வாயிலாக, 6,000 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன என்று நடராஜ் கூறினார்.-DINAVIDIYAL!