சென்னை: பொறியியல் சேர்க்கைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு, நாளை ரேண்டம் எண் வழங்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து வரும் 30ம் தேதி, "ரேங்க்&' பட்டியல் வெளியிடப்படுகிறது.
பொறியியல் படிப்பில் சேர, ஒரு லட்சத்து 80 ஆயிரம் மாணவர்கள் நடப்பாண்டில் விண்ணப்பித்தனர். இவர்களில், பல நிலைகளில் ஒரே தகுதியைக் கொண்ட மாணவ, மாணவியர் இருந்தால் அவர்களில் யாரை முதலில் கவுன்சிலிங்கிற்கு அழைப்பது என்ற பிரச்னையை களைவதற்காக, ரேண்டம் எண் வழங்கப்படுகிறது. அதன்படி, விண்ணப்பித்த அனைத்து மாணவ, மாணவியருக்கும், நாளை காலை 9:30 மணிக்கு, அண்ணா பல்கலையில், ரேண்டம் எண் வழங்கப்படுகிறது.
ஒரு மாணவர், கணிதத்தில் பெற்ற அதே மதிப்பெண்களை, வேறொரு மாணவர் பெற்றிருந்தால், இருவரில் யாரை முதலில் கவுன்சிலிங்கிற்கு அழைப்பது என்று முடிவு செய்ய, அடுத்ததாக இயற்பியலில் இருவர் பெற்ற மதிப்பெண்கள் பார்க்கப்படும். இதுவும் சமமாக இருந்தால், விருப்பப் பாடத்தில் பெற்ற மதிப்பெண்கள் பார்க்கப்படும்.
இதிலும், ஒரே மதிப்பெண்களை பெற்றிருந்தால், பிறந்த தேதி கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். இதுவும் ஒரே தேதியாக இருக்கும் பட்சத்தில், இருவரில் யாருடைய, ரேண்டம் எண் மதிப்பு அதிகமாக இருக்கிறதோ, அவர் முதலில் கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்படுவார். எனவே ரேண்டம் எண் பயன்பாடு மிகவும் குறைவாகவே இருக்கும்.
பொறியியல் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்திரியராஜ் கூறியதாவது: பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த அனைவருக்கும், பத்து இலக்க எண்கள் கொண்ட,ரேண்டம் எண் கம்ப்யூட்டர் மூலம் ஒதுக்கீடு செய்யப்படும். வரும் 30ம் தேதி, ரேங்க் பட்டியல் வெளியிடும் போது தான், எத்தனை மாணவ, மாணவியருக்கு, ரேண்டம் எண் பயன்படுத்த வேண்டியது வரும் என்பது தெரியும்.
கடந்த ஆண்டு, 20 மாணவர்களுக்கு, ரேண்டம் எண் பயன்படுத்த வேண்டியிருந்தது. இந்த ஆண்டும், இந்த எண்ணிக்கைக்குள் தான் இருக்கும் என்று உத்திரியராஜ் கூறினார்.-DINAVIDIYAL!