புதுடில்லி:"டில்லியில் நடந்த கற்பழிப்பு சம்பவத்தை அடுத்து, புத்தாண்டை கொண்டாடப் போவதில்லை' என, காங்கிரஸ் தலைவர், சோனியா முடிவு செய்துள்ளார்.டில்லியில், ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி கற்பழிக்கப்பட்ட சம்பவம், 2012ம் ஆண்டில் ஒரு கரும்புள்ளியாக அமைந்து விட்டது. இந்த சம்பவத்திற்காக, நாடே கொதித்து போய் உள்ளது.
இதனால், பிறக்கவுள்ள புத்தாண்டை வரவேற்கவோ, கொண்டாடவோ யாருக்கும் மனம் வரவில்லை. அந்த வகையில், டில்லியில் போராட்டத்தில் குதித்துள்ளவர்கள் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்பது இல்லை என, முடிவு செய்துள்ளனர். அதே போல், டில்லி உட்பட, நாட்டின் முக்கிய நகரங்களில் உள்ள நட்சத்திர ஓட்டல்களிலும், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு இம்முறை விடை கொடுத்துள்ளனர்.அரசியல் கட்சி தலைவர்களும், சமூக ஆர்வலர்களும், புத்தாண்டு கொண்டாட்டத்தை தவிர்க்கும்படி அழைப்பு விடுத்துள்ளனர்.
டில்லியில், தன்னை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்க வரும் கட்சியினர் மற்றும் தன் நலம் விரும்பிகளிடம், காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா விடுக்கும் வேண்டுகோளில், புத்தாண்டு கொண்டாட்டத்தை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறார்.
கடந்த வார இறுதியில், டில்லியில் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில், நிருபர்களை சந்தித்த சோனியா, "புத்தாண்டு நெருக்கத்தில் இருக்கும் போது, பொதுவாக நாம் மற்றவர்களுடன் வாழ்த்துக்களை பரிமாறி கொள்வோம். ஆனால், தற்போது நம் எண்ணம் எல்லாம், பாதிக்கப்பட்ட அந்த இளம் பெண்ணை பற்றியே உள்ளது' என, தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராணுவம் தவிர்ப்பு
கற்பழிப்பு சம்பவத்தில், பலியான இளம்பெண்ணுக்கு அஞ்சலி தெரிவிக்கும் வகையில், மத்திய பாதுகாப்பு அமைச்சகமும், முப்படையினரும் புத்தாண்டை யொட்டி எவ்வித விருந்தையும் நடத்துவது இல்லை என, முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக, முப்படைகள் சார்பில் ஏற்கனவே, அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
DINAVIDIYAL!