சென்னை:
"பொறியியல், முதல் செமஸ்டர் தேர்வு முடிவுகள், ஒரு வாரத்தில் வெளியிடப்படும்" என, அண்ணா பல்கலை துணைவேந்தர் காளிராஜ் தெரிவித்தார்.
அண்ணா பல்கலை இணைப்பு அங்கீகாரம் பெற்ற தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு, முதல் செமஸ்டர் தேர்வு முடிவை, இன்னும் அண்ணா பல்கலை வெளியிடவில்லை. ஆனால், 2 வது செமஸ்டர் தேர்வு அட்டவணையை, அறிவித்துவிட்டது.
முதல் செமஸ்டர் தேர்வுகளில் தோல்வி அடைந்தால், அந்த பாடத்தை, திரும்ப எழுதுவதற்கான தேர்வு அட்டவணையையும் வெளியிட்டுள்ளது. இதனால், மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
முதல் செமஸ்டர் தேர்வு முடிவுகளை விரைந்து வெளியிட்டால் தான், அதில் தோல்வி அடையும் பாடங்களை, மீண்டும் எழுத விண்ணப்பிக்க முடியும் என, மாணவர்கள் கூறுகின்றனர்.
இது குறித்து, அண்ணா பல்கலை துணைவேந்தர் காளிராஜிடம் கேட்டபோது, "இன்னும் ஒரு வாரத்தில், முதல் செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். இலங்கை விவகாரம் காரணமாக, பொறியியல் கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை விடப்பட்டுள்ளது. கல்லூரி எப்போது துவங்கும் என்பதை, இப்போது கூற முடியாது. அரசு உத்தரவிட்டபின், அது குறித்து அறிவிக்கப்படும்" என்றார்.-DINAVIDIYAL!