ஒகேனக்கல்லில் நீர்வரத்து வெள்ளிக்கிழமை இரவு நிலவரப்படி நொடிக்கு 35 ஆயிரம் கன அடியை எட்டியுள்ளது. இதனால், தொங்குபாலம் மற்றும் அருவிகளில் குளிக்கச் செல்லும் பகுதிகளுக்கு "சீல்' வைக்கப்பட்டது.
இதனால், பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
"ஆசியாவின் நயாகரா' என்றழைக்கப்படும் ஒகேனக்கல்லுக்கு பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கர்நாடகம், ஆந்திரம், புதுவை உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் தினமும் வருகை தருகின்றனர்.
கேரளம், கர்நாடகத்தில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் தொடர் மழையாலும், காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் பலத்த மழையாலும் கர்நாடகத்திலுள்ள அணைகள் நிரம்பின. இதனால், கபினி அணையிலிருந்து நொடிக்கு 35 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
கர்நாடகத்திலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீரின் அளவை தமிழக- கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வள ஆணைய அலுவலர்கள் தினமும் கணக்கிட்டு மத்திய, மாநில அரசுகளுக்கு அறிக்கை அனுப்பி வருகின்றனர்.
வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி நொடிக்கு 31 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இரவில் 35 ஆயிரம் கன அடியை எட்டியது.
நீர்வரத்து அதிகரித்திருப்பதால் ஒகேனக்கல்லுக்கு செல்லும் நடைபாதையிலும் தண்ணீர் செல்கிறது. தொங்கு பாலத்துக்கு சீல் வைத்த வருவாய்த் துறையினர், போலீஸார் சுற்றுலாப் பயணிகளை தடுத்து திருப்பி அனுப்பினர்.
பரிசல்கள் நிறுத்தம்: வெள்ளம் பெருக்கெடுத்ததைப் போன்று தண்ணீர் செல்வதால் மாமரத்துக்கடவு, கோத்திக்கல், ஊட்டமலை, ஒகேனக்கல் சத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள பரிசல் துறைகளில் அனைத்துப் படகுகளும் அப்படியே நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், பரிசலில் செல்லவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. ஒகேனக்கல்லில் உள்ள மீன் கடைகள், இதர கடைகள் அனைத்தும் விற்பனையின்றி காணப்படுகின்றன.-DINAVIDIYAL!