மூடப்பட்டுள்ள தூத்துக்குடி ஸ்பிக் மற்றும் டாக் தொழிற்சாலைகள் தொடர்ந்து இயங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து முதல்வர் ஜெயலலிதாவுக்கு அவர் வெள்ளிக்கிழமை எழுதிய கடிதம்:
தூத்துக்குடியில் உள்ள ஸ்பிக் உரத் தொழிற்சாலை, டாக் ரசாயன தொழிற்சாலை ஆகியவை கடந்த 2-3-2013 முதல் இயங்காமல் உள்ளது. இதனால் விவசாயமும், உப்புத் தொழிலும் பாதிக்கப்படும். தினசரி 1,200 டன் யூரியா உற்பத்தி செய்யும் ஸ்பிக் தொழிற்சாலை நிறுத்தப்பட்டிருப்பதால் உரத்தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சிறு உற்பத்தியாளர்களிடம் இருந்து ஆண்டுக்கு 2 லட்சம் டன் உப்பை டாக் தொழிற்சாலை கொள்முதல் செய்கிறது. இத்தொழிற்சாலை இயங்காததால் உப்பு உற்பத்தியாளர்களும், உப்பளத் தொழிலாளர்களும் பாதிக்கப்படுவார்கள்.
டாக் நிறுவனம் 32 தொழிலாளர்களையும், ஸ்பிக் நிறுவனம் 19 தொழிலாளர்களையும் எவ்வித முன் அறிவிப்பும் இன்றி
வேலையில் இருந்து நிறுத்தியுள்ளது.
டாக் நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு ரூ. 2 கோடி சம்பள பாக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வியாழக்கிழமை (ஜூன் 27) முதல் டாக் நிறுவனம் கதவடைப்பு செய்துள்ளது.
இப்பிரச்னையில் தமிழக அரசு தலையிட்டு மீண்டும் ஸ்பிக், டாக் தொழிற்சாலைகள் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு சம்பளம் கிடைக்கவும், வேலைநீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு மீண்டும் வேலை கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜி. ராமகிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்.-DINAVIDIYAL!