HAPPY PONGAL WISHES

WELCOME TO DINAVIDIYAL...fast online tamil news network...

Thursday, 5 September 2013

103 வயது மனிதருக்கு இடுப்பு எலும்பு மாற்று அறுவை சிகிச்சை: ஆந்திராவில் சாதனை

ஐதராபாத், செப். 5-

1910ம் ஆண்டில் சஹீராபாத்தில் பிறந்த மணிக்யம் என்பவர் கடேஸ்கர் என்ற இடத்தில் தனது மகனுடன் வசித்து வருகின்றார். 103 வயதான இவருக்கு 9 பிள்ளைகளும், 57 பேரப்பிள்ளைகளும், 20 கொள்ளுப் பேரக் குழந்தைகளும் உண்டு.



மூன்று வாரங்களுக்கு முன்னால், தெருநாய் ஒன்றை விரட்டியபோது கீழே விழுந்த இவருக்கு இடது பக்க இடுப்பெலும்பு மூட்டு உடைந்து வலியுடன் செகந்தராபாத்தில் உள்ள அபோல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரது வயது காரணமாக அவருக்கு மயக்க மருந்து கொடுப்பது என்பது கூட சவாலான விஷயமாக இருந்தது. ஆயினும், அறுவை சிகிச்சை செய்யாவிட்டால் அது அவரது உயிருக்கே ஆபத்தாக முடியும் என்பதால் டாக்டர் மிதின் அசியுடன் இணைந்த மருத்துவர் குழு ஒன்று வெற்றிகரமாக இந்த அறுவை சிகிச்சையினை நடத்தி முடித்தது.

இந்தத் தகவலை நேற்று மருத்துவமனையில் நடந்த நிருபர்கள் சந்திப்பு ஒன்றில் டாக்டர் மிதின் அசி தெரிவித்தார். அப்போது தள்ளு நாற்காலியில் மணிக்யமும் உடனிருந்தார். அவருக்கு லேசான ரத்த அழுத்தம், கண்பார்வைக் கோளாறு தவிர உடல் கோளாறு எதுவும் இல்லை என்று தெரிவித்த மருத்துவர் அவர் விரைவில் குணமடைவார் என்றும் கூறினார்.

மல்யுத்தம், சைக்கிள் ஒட்டுதல் ஆகியவை தனது தந்தைக்கு விருப்பமான விஷயங்களாக இருந்தன என்று அவரது மகன் நிர்மல்குமார் தெரிவித்தார். வீட்டில் விளைந்த காய்கறிகளும், ரொட்டிகளும் உண்டுவந்த அவருக்கு பற்கள் 103 வயதிலும் வலுவாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தொண்டு நிறுவனம் ஒன்றின் மருத்துவர் இவருக்கு சிறிய அளவில் மருத்துவ முறைகளும், தையலும் கற்றுத் தந்துள்ளார். மதகுருவாகவும் பணி புரிந்த மணிக்யம், இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்னால் தான் கர்நாடகாவில் பிளேக் நோய்த் தடுப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டதை நினைவு கூர்கின்றார்DINAVIDIYAL!