பெரம்பூர் ரெயில் நிலையம் அருகே ராஜீவ்காந்தி நகரில் 50–க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் உள்ளன. இன்று காலை 8.45 மணிக்கு திடீரென குடிசை வீடுகளில் தீப்பிடித்தது.
அங்கு வெற்றிலை பாக்கு கடை வைத்திருக்கும் ராமன், திவாகர் மனைவி ஜமுனா ஆகியோர் தீப்பிடித்ததை பார்த்து அக்கம் பக்கத்தினரை உதவிக்கு கூப்பிட்டனர். இதனால் ஒன்று திரண்ட குடிசைவாசிகள் தீயை அணைக்க போராடினர்.
ஆனால் காற்று வேகமாக அடித்ததால் தீ மள மளவென எரிய தொடங்கியது. இதனால் தீயணைப்பு
நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
உடனே தீயணைப்பு அதிகாரி சிவசங்கரன் தலைமையில் செம்பியம், ஐகோர்ட்டு, வியாசர்பாடி, வண்ணாரப்பேட்டை, வேப் பேரி எஸ்.பிளனேடு பகுதி களில் இருந்து தீயணைப்பு வண்டிகள் விரைந்து சென்று தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 20 நிமிடம் போராடி தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் 22 குடிசை வீடுகள் எரிந்து சாம்பலாகி விட்டது.
அங்கிருந்த கட்டில், பீரோ, டி.வி. உள்பட அனைத்தும் எரிந்து நாசமானது. சேத மதிப்பு ரூ. 10 லட்சத்திற்கும் மேல் இருக்கும் என தெரிகிறது.
தீ விபத்தில் வீட்டை இழந்த ராமன் கண்ணீர் மல்க கூறியதாவது:–
நான் இங்கு பல வருடமாக குடியிருந்து வெற்றிலை பாக்கு கடை நடத்தி வருகிறேன். என் கடையின் அருகில் உள்ள வீட்டில் தீ எரிவதை பார்த்து கூச்சலிட்டு வெளியே ஓடி வந்தேன்.
இதனால் மற்ற வீடுகளில் இருந்த மக்கள் வெளியே ஓடி வந்தனர். எல்லோரும் தீயை அணைக்க முற்பட்டோம். ஆனால் தீமளமள என வேகமாக பரவியதால் உயிரை காப்பாற்ற ரோட்டுக்கு வந்து விட்டேன். அதன் பிறகு தீயணைப்பு வண்டி வந்து தீயை அணைத்தனர்.
கார்பெண்டர் திவாகர் மனைவி ஜமுனா கூறியதாவது:–
வீடுகளில் தீப்பிடித்து எரிவதாக முதியவர் ராமன் கத்தும் குரல் கேட்டு நான் வெளியே ஓடி வந்தேன். ஆனால் அதற்குள் தீ வேகமாக பரவியது. இதில் என் வீட்டில் இருந்த விலை உயர்ந்த கட்டில்கள், மரப் பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாகி விட்டது. அரசுதான் எங்களுக்குதான் உதவி செய்ய வேண்டும் என்றார்-DINAVIDIYAL!