HAPPY PONGAL WISHES

WELCOME TO DINAVIDIYAL...fast online tamil news network...

Saturday, 7 September 2013

தமிழ் மொழியின் சிறப்புகளை பட்டியலிட்ட பா.ஜனதா எம்.பிக்கு டாக்டர் ராமதாஸ் பாராட்டு

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
நாடாளுமன்றத்தில் மிகப்பெரிய அதிசயம் நிகழ்ந்திருக்கிறது. மேல் சபையில் மாநிலங்களவையில் கடந்த 5–ஆம் தேதி உத்தர்காண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பாரதீய ஜனதா எம்.பி.யும் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அரசியல் சீடருமான தருண் விஜய் முக்கியத்துவம் வாய்ந்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் ஒன்றை கொண்டு வந்திருக்கிறார்
.
தமிழ் மொழியின் சிறப்புகளையெல்லாம் பட்டியலிட்ட அவர், தமிழை இந்தியாவின் தேசிய அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும் என்று குரல் கொடுத்திருக்கிறார்.
அத்துடன் நிற்காமல் அனைத்து மத்திய பல்கலைக் கழகங்களிலும் தமிழுக்கு தேசிய இருக்கைகளை ஏற்படுத்த வேண்டும்; வட இந்தியாவில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்களில் தமிழின் சிறப்பை பரப்ப வேண்டும்; தமிழ் மொழியை பயிலும் வட இந்தியர்களுக்கு ஊதிய உயர்வும், பதவி உயர்வும் வழங்கப்பட வேண்டும்; ஏழு கடல், ஏழு மலை தாண்டி சிறந்து விளங்கும் செம்மொழியான தமிழின் சிறப்பை வட இந்தியரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தருண் விஜய் வலியுறுத்தியிருக்கிறார்.
தமிழுக்காக தமிழ்நாட்டு உறுப்பினர்கள் குரல் கொடுத்தாலே அதை அனுமதிக்க வட இந்திய உறுப்பினர்கள் மறுத்து வந்த நிலையில் தமிழுக்காக வட இந்திய உறுப்பினர் ஒருவரே குரல் கொடுத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக தருண் விஜய்க்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
எங்கோ பிறந்த, இந்தி பேசும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தமிழுக்காக வாதாடியிருப்பது உண்மையிலேயே பெருமிதம் அளிக்கிறது. தமிழ் உலகமெல்லாம் போற்றப்பட வேண்டும் என்ற தமிழர்களின் கனவு நனவாகி விட்டதாகவே தோன்றுகிறது.
எனவே தமிழின் சிறப்பையும், தமிழர்களின் உணர்வுகளையும் மதித்து தமிழை தேசிய மொழியாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
-DINAVIDIYAL!