புதுவையில் ரவுடிகள் அட்டகாசம் தலைவிரித்து ஆடுகிறது. நிலங்களை விற்கும், வாங்கும் பொதுமக்களை மிரட்டி பணம் பறிப்பது, புதிதாக வீடு கட்டுபவர்களை மிரட்டி பணம் கேட்பது, வியாபாரிகளிடம் மாமூல் கேட்பது, தரமறுத்தால் தாக்குவது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வந்தன.
இதை கண்டிக்கும் வகையில் கடந்த மாதம் வியாபாரிகள் முழு கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பிறகும் ரவுடிகள் அட்டகாசம் குறையவில்லை. சட்டசபை காவலில் இருந்த போலீஸ் காரரையே ரவுடிகள் மிரட்டி சென்றனர். ஓட்டல் ஒன்று ரவுடிகளால் அடித்து நொறுக்கப்பட்டது.
இந்த நிலையில் கவர்னர் வீரேந்திர கட்டாரியா பத்திரிகைக்கு பேட்டி அளித்தார். அதில் ‘‘புதுவையில் சட்டம்– ஒழுங்கு நிலைமை சரியில்லை. ரவுடிகளை கட்டுப்படுத்தும்படி முதல்– அமைச்சர் ரங்கசாமியிடம் கூறினேன். அவர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. என்னிடமும் இதுபற்றி ஆலோசனை நடத்தவில்லை. எனவே புதுவையில் சட்ட ஒழுங்கு பிரச்சிரனை தொடர்பாக மத்திய உள்துறை மந்திரியை சந்தித்து பேச இருக்கிறேன். ரவுடிகளை ஒடுக்க நானே நேரடியாக நடவடிக்கையில் இறங்க போகிறேன்’’ என்று கூறினார்.
கவர்னருடைய இந்த பேட்டி புதுவை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் மூலம் கவர்னருக்கும், முதல்– அமைச்சர் ரங்கசாமிக்கும் இடையே மோதல் போக்கு உருவாகியிருப்பது வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது.
பொதுவாக ஒரு மாநிலத்தில் சட்டம்–ஒழுங்கு சரியில்லை என்றால் அதுபற்றி கவர்னர் மத்திய அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்து ஆட்சியையே கலைக்க சொல்லும் அதிகாரம் உள்ளது. கவர்னர் இதுபோன்ற அறிக்கையை தாக்கல் செய்தால் 356–வது சட்டத்தை பயன்படுத்தி மத்திய அரசு மாநில ஆட்சியையே கலைக்கலாம்.
இப்போது புதுவையில் சட்டம்–ஒழுங்கு சரியில்லை என்று கவர்னர் கூறியிருப்பதால் ஒருவேளை அவர் இது சம்மந்தமாக மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பி விடுவாரோ என்ற பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது. அவர் அப்படி அறிக்கை அனுப்பினால் ஆட்சிக்கே ஆபத்து ஏற்பட்டுவிடும்.
விரைவில் கவர்னர் டெல்லி செல்ல திட்டமிட்டு இருக்கிறார். அப்போது அவர் உள்துறை மந்திரியை சந்தித்து இதுபற்றி பேசுவார். அதன்பிறகு அவர் கடுமையான நடவடிக்கையில் இறங்ககூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கவர்னருடைய பேட்டி நேற்று வெளியானதை அடுத்து பல்வேறு கட்சிகளும் தங்களுடைய கருத்துக்களை வெளியிட்டுள்ளன.
காங்கிரஸ் கட்சி முன்னாள் முதல்– அமைச்சரும், எதிர்கட்சி தலைவருமான வைத்திலிங்கம் இதுபற்றி கூறும்போது, ‘‘மாநிலத்தின் சட்டம்–ஒழுங்கு சரியில்லை என்று கவர்னரே கூறி விட்டார். எனவே இதற்கு தார்மீக பொறுப்பேற்று முதல்–அமைச்சர் ரங்கசாமி ராஜினாமா செய்யவேண்டும்‘‘ என்று அவர் கூறியுள்ளார்.
மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் எம்.எல்.ஏ. இதுபற்றி கூறும்போது, புதுவையில் உண்மை நிலவரங்களை கவர்னர் கூறியிருக்கிறார். கவர்னர் இது தொடர்பாக எழுத்து மூலமாக மத்திய உள்துறை மந்திரிக்கு கடிதம் அனுப்பி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
-DINAVIDIYAL!