சேலம் பழைய பஸ் நிலையத்தில் பஸ்சில் ஏற முயன்ற மூதாட்டியிடம் 3½ பவுன் நகை பறித்து சென்ற பெண்ணை போலீசார் தேடிவருகிறார்கள்.
மூதாட்டியிடம் நகை பறிப்பு
சேலம் அன்னதானப்பட்டி மணியனூரை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி சரஸ்வதி(வயது65). நேற்று ஆவணி அமாவாசையையொட்டி, உறவினர்களுடன் சரஸ்வதி சித்தர்கோவில் செல்ல எண்ணினார். அதற்காக அவர் சேலம் பழைய பஸ் நிலையத்திற்கு வந்தார்.
அங்கு நின்று அரசு பஸ்சின் பின்படிக்கட்டு வழியாக உறவினர்கள் ஏற, முன்படிக்கட்டு வழியாக சரஸ்வதி ஏற முயன்றார். அப்போது சரஸ்வதியின் பின்னால் பஸ் ஏறுவதற்கு தயாராக நிற்பதுபோல நடித்து கொண்டிருந்த இளம்பெண் ஒருவர், மூதாட்டி கழுத்தில் கிடந்த 3½ பவுன் தங்கச்சங்கிலியை பறித்து கொண்டு ஓட்டம் பிடித்தார்.
தப்பிச்சென்றார்
சரஸ்வதி சத்தம் போடுவதற்குள், நகைபறித்த இளம்பெண் பஸ்களுக்கு இடையே நெழிந்து நெழிந்து ஓடி தப்பினார். பொதுமக்களும் உடனடியாக அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால், அப்பெண் சிக்கவில்லை.
நகையை பறிகொடுத்த மூதாட்டி, சிறுபிள்ளைபோல பஸ் நிலையத்தில் வேதனையும் துக்கமும் தாங்காமல் அழத்தொடங்கினார். அவருக்கு அங்கிருந்து பொதுமக்கள், உறவினர்கள் ஆறுதல் கூறி சேலம் டவுன் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். சரஸ்வதி கொடுத்த புகாரின் பேரில் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
போலீசார் விடுவித்த பெண்ணா?
சேலம் 2-வது அக்ரஹாரம் பகுதியில் ரத்த வங்கி ஒன்றில் நேற்று முன்தினம் ஒரு பெண் மற்றும் 2 வாலிபர்கள் புகுந்தனர். பின்னர் அங்கிருந்த உரிமையாளர் பார்வதி கழுத்தில் அணிந்திருந்த நகையை பறிக்க முயன்றனர். அவர் கூச்சல் போடவும் 2 வாலிபர்களும் ஓட்டம் பிடித்தனர். தப்பி ஓடிய பெண்ணை பொதுமக்கள் போராடி பிடித்து சேலம் டவுன் குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைத்தனர். ஆனால், போலீசார் பெயரளவுக்கு விசாரித்து விட்டு அப்பெண்ணை போ.. என துரத்தி விட்டனர்.இந்த நிலையில் நேற்று பழைய பஸ் நிலையத்தில் பஸ் ஏற முயன்ற மூதாட்டி சரஸ்வதியிடம் 3½ பவுன் நகையை பறித்து சென்ற பெண், போலீசார் கைது செய்யாமல் துரத்திய பெண்ணாக இருக்கலாம் என பொதுமக்களால் கூறப்படுகிறது.பொதுமக்கள் பிடித்து கொடுத்த பெண்ணை போலீசார் அலட்சியமாக விட்டு விட்டதால்தான் அப்பெண் தொடர்ந்து கைவரிசையில் ஈடுபட்டிருக்கிறார் என கூறப்படுகிறது-DINAVIDIYAL!