HAPPY PONGAL WISHES

WELCOME TO DINAVIDIYAL...fast online tamil news network...

Saturday, 7 September 2013

உணவு பாதுகாப்பு மசோதா கருணாநிதி விளக்கம் உண்மைக்கு மாறானது: ஜெயலலிதா அறிக்கை

உணவு பாதுகாப்பு மசோதா கருணாநிதி விளக்கம் உண்மைக்கு மாறானது: ஜெயலலிதா அறிக்கை  சென்னை, செப். 7–
முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
தேசிய உணவுப் பாதுகாப்பு மசோதாவில் அரிசிக்கான விலையைப் பற்றியோ, பற்றாக்குறை ஏற்படும் சமயத்தில் மாநில அரசே உணவுப் பொருட்களை வாங்கிட வேண்டும் என்பது பற்றியோ, ‘‘பண மாற்றம்’’, ‘‘உணவுப் கூப்பன்’’ ஆகியவை பற்றியோ, மாநில அரசின் ஒப்புதல் இல்லாமலேயே
நிறைவேற்றக்கூடிய ஷரத்துக்கள் பற்றியோ,
நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமலேயே மத்திய அரசின் அறிவிக்கை மூலமாக மாநிலத்திற்கு வழங்கப்படும் அரிசியின் அளவு, விலை ஆகியவற்றை மாற்றி அமைக்க வழிவகை செய்யும் பிரிவு 37 பற்றியோ, எவ்வித திருத்தங்களும் மத்திய அரசு கொண்டு வராத சூழ்நிலையில், இந்த மசோதாவிற்கு ஆதரவாக தி.மு.க. வாக்களித்து இருப்பது தமிழக மக்களுக்கு இழைத்திருக்கும் மாபெரும் துரோகம்.
இதனைக் குறிப்பிட்டு நான் விடுத்த அறிக்கைக்கு பதில் அளிக்கும் விதமாக ‘‘உணவுப் பாதுகாப்புச் சட்டம்–இலாபமா? நட்டமா?’’ என்ற தலைப்பில் கருணாநிதி அறிக்கை வெளியிட்டிருப்பதைப் பார்க்கும் போது ‘‘கழுவுற மீனிலே நழுவுற மீன்’’ என்ற பழமொழி தான் என் நினைவிற்கு வருகிறது.
தி.மு.க. தலைவர் கருணாநிதி தன்னுடைய அறிக்கையில், புதிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி மானிய விலையான கிலோ 3 ரூபாயில் மாதத்திற்கு 2 லட்சத்து 37 ஆயிரத்து 900 டன் அரிசி, அதாவது ஆண்டொன்றுக்கு 28.54 லட்சம் டன் அரிசி தமிழகத்திற்கு கிடைக்கும் என்று கூறியிருக்கிறார். இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பான தகவல் ஆகும்.
அந்தியோதயா அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் உள்ள குடும்பங்களின் எண்ணிக்கையை நபர்களின் எண்ணிக்கையாக கணக்கிட்டு கருணாநிதி தன்னைக் குழப்பிக் கொண்டுள்ளார்.
மாநிலங்கள் அவையில் இந்த மசோதாவுக்கு பதில் அளித்து பேசிய மத்திய உணவுத் துறை அமைச்சர் கே.வி. தாமஸ் அவர்களே முன்னுரிமை குடும்பங்களுக்கு என தமிழ் நாட்டிற்கு 24 லட்சம் டன் அரிசி தான் ஒதுக்கப்படும் என்று கூறி இருக்கிறார்.
பொது விநியோகத் திட்டத்தின் மூலம் மாதா மாதம் தமிழகத்திற்கு வழங்கப்பட்டு வரும் அரிசியின் அளவு குறைக்கப்படக்கூடாது என்று நான் பல முறை மத்திய அரசுக்கு எழுதிய கடிதங்களின் அடிப்படையில், கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ் நாட்டிற்கு வழங்கப்பட்ட சராசரி அரிசியின் அளவை அடிப்படையாக வைத்து, ஆண்டொன்றுக்கு 36.78 லட்சம் மெட்ரிக் டன் என்று நிர்ணயித்து அதற்கான திருத்தத்தை மசோதாவின் நான்காவது அட்டவணையில் சேர்த்து மசோதாவை நிறைவேற்றியது. இருப்பினும், தகுதியுள்ள குடும்பங்களுக்கு மட்டுமே ஒரு கிலோ அரிசி மூன்று ரூபாய் என்ற விலையில் வழங்கப்படும்.
கருணாநிதி மேலும் தனது அறிக்கையில், ‘‘உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை எதிர்ப்பதற்கு ஜெயலலிதா கூறுகின்ற ஒரே காரணம், வறுமைக் கோட்டிற்கு மேலே உள்ள மக்களுக்காக வழங்கப்படும் அரிசியை கிலோ ஒன்றுக்கு ரூ.8.30 விலையில் தான் வழங்க வேண்டும் என்பது தான்’’ என்று குறிப்பிட்டு, இந்தக் கோரிக்கை ஏற்கப்படும் என்று மத்திய உணவுத் துறை அமைச்சர் கே.வி. தாமஸ், டி.ஆர். பாலுவுக்கு கடிதம் எழுதியிருப்பதாகத் தெரிவித்து, அதை ஓர் ஆதாரமாக சித்தரித்து இருக்கிறார்.
கருணாநிதியின் இந்தக் கூற்று நகைப்புக்குரியதாக உள்ளது. சட்டத்தில் திருத்தம் கொண்டு வராமல், வாய்மொழியாக, தகுதியுள்ள நபர்கள் போக மீதம் உள்ளவர்களுக்கு 8 ரூபாய் 30 காசு என்ற விலையில் ஒரு கிலோ அரிசியை மத்திய அரசு வழங்கும் என்று சொல்வதெல்லாம் எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
மக்களவையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டாக்டர் மு.தம்பிதுரை இது குறித்து கேட்ட போது, ‘‘நீங்கள் கொடுத்த சட்ட திருத்தம் இந்த மசோதா நிறைவேறும் போது கவனத்தில் கொள்ளப்படும்’’ என்று மத்திய உணவுத் துறை அமைச்சர் கே.வி. தாமஸ் பதில் அளித்தார். ஆனால், மசோதாவில் விலை குறித்த திருத்தம் மேற்கொள்ளப்படவில்லை.
இந்தப் பிரச்சனையை மாநிலங்கள் அவையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநிலங்களவைக் குழுத் தலைவர் டாக்டர் வா. மைத்ரேயன் எழுப்பிய போது, ‘‘மத்திய அமைச்சரவைக் குழு இதற்கு ஒப்புதல் அளித்திருக்கிறது. இதைவிட வேறு என்ன உத்தரவாதம் வேண்டும்?’’ என்ற மழுப்பலான பதிலை மத்திய உணவுத் துறை அமைச்சர் கே.வி. தாமஸ் அவர்கள் அளித்துள்ளார்.
சட்டத்தின் பகுதியாக இல்லாத ஒன்றை மத்திய அரசு தன் விருப்பப்படி எப்பொழுது வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம் என்பதும், சட்டத்தின் பகுதியாக உள்ள பொருளை மட்டுமே நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் மாற்ற இயலாது என்பதும் ஐந்து முறை முதலமைச்சராக இருந்த கருணாநிதிக்கு தெரியாதா? ஆனால், வேண்டுமென்றே இதனை மறைத்து, மக்களை திசை திருப்பும் வகையில், மத்திய அரசு 6.97 லட்சம் மெட்ரிக் டன் அரிசியை 8 ரூபாய் 30 காசுக்கு தர உத்தரவிட்டுள்ளது ஏற்றுக் கொள்ளக் கூடியது என்று கூறுகிறார் கருணாநிதி.
சட்டத்தின் வலிமை பற்றி கருணாநிதி கூறிய ஒரு கருத்தினை இங்கு சுட்டிக் காட்டுவது பொருத்தமென கருதுகிறேன். 15.7.2006 அன்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற அரசு விழாவிலே பேசிய கருணாநிதி, ‘‘வருகின்ற சட்டமன்றக் கூட்டத் தொடரில் காமராஜர் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாள் என்று அறிவிக்கப்படவும், அந்த நாளில் எல்லாப் பள்ளிக் கூடங்களிலும் அவருடைய பெயரைச் சொல்லி அவருடைய படத்திற்கு ஆங்காங்கு மாலைகள் அணிவித்து, அவருக்கு வாழ்த்துச் சொல்லி நன்றி கூறுகிற நாளாக இந்த நாளை கொண்டாட வேண்டும் என்பதையும் சட்டமாக ஆக்குவதற்கு நான் முனைவேன், ஆக்குவேன்’’ என்று தெரிவித்ததோடு, சட்டத்திற்கும், ஆணைக்கும் உள்ள வித்தியாசம் என்ன? எது வலிமை வாய்ந்தது? எது மாற்ற முடியாதது? எது மாற்றுவதற்கு எளிதல்ல’’ என்றெல்லாம் பேசி இருக்கிறார்.
2006 ஆம் ஆண்டு சட்டத்தின் வலிமை பற்றி இப்படி பேசிவிட்டு, இப்போது மத்திய உணவு அமைச்சரின் வாய்மொழி உத்தரவினை வேதவாக்காக எடுத்துக் கொண்டு, மத்திய அரசு 8 ரூபாய் 30 காசு என்ற அளவில் அரிசியை வழங்க ஒத்துக் கொண்டுவிட்டது, அதனால் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்த மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்தனர் என்று கூறுவது தமிழக மக்களை ஏமாற்றும் செயல்.
15.7.2006 அன்று நடைபெற்ற அரசு விழாவிலே கருணாநிதி மேலும் பேசுகையில், ‘‘சட்டமாகவே ஆக்கிவிட்டால், அதைக் கூட மாற்றலாம், அதை மாற்றுவதற்கு சட்டசபைக்கு வந்தாக வேண்டும்’’ என்று கூறியிருக்கிறார். இப்படிப் பேசியுள்ள கருணாநிதி, நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறாமலேயே தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ள அனைத்து அட்டவணைகளிலும் திருத்தங்களை மேற்கொள்வதற்குரிய அதிகாரத்தினை மத்திய அரசுக்கு வழங்க வழிவகை செய்திருக்கும் இந்தச் சட்டத்தினை ஆதரித்துவிட்டு அதற்கு நியாயம் கற்பிக்க முயல்வது பித்தலாட்டத்தின் உச்சகட்டம்.
மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசைப் பொறுத்தவரையில், ஏற்கெனவே வழங்கப்பட்டு வந்த அரிசியை 8 ரூபாய் 30 காசு என்ற விலைக்கு தொடர்ந்து அளிக்கும் எண்ணமில்லை. கண்துடைப்பு நாடகமாக ஒரு சில மாதங்களுக்கு வழங்கிவிட்டு பின்னர் மாற்றிவிடலாம் என்ற எண்ணத்தில் மத்திய அரசு இருக்கிறது.
மாநிலங்கள் அவையில் இது குறித்த நடைபெற்ற விவாதத்தின் போது, விலை குறித்து மைத்ரேயன் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த மத்திய உணவுத் துறை அமைச்சர் கே.வி. தாமஸ், வறுமைக் கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கான அரிசியின் விலை என்பது குறைந்தபட்ச ஆதார விலையுடன் தொடர்புடையதாக இருப்பதால், அதனைச் சட்டத்தில் சேர்க்கவில்லை என்று சொல்வதிலிருந்தே மத்திய அரசின் நாடித் துடிப்பை, எண்ண ஓட்டத்தை எளிதில் தெரிந்து கொள்ளலாம்.
அரிசியின் விலைக்கான உத்தரவாதத்தை அளிக்காத இந்தச் சட்டத்தை ஆதரித்து தி.மு.க. வாக்களித்து இருப்பது தமிழகத்திற்கு எதிரான செயல். இதன் மூலம் தமிழர்களுக்கு மாபெரும் துரோகத்தினை புரிந்திருக்கிறார் கருணாநிதி.
தமிழக அரசு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மாதம் ஒன்றுக்கு 3.20 லட்சம் டன் அரிசியை வழங்கி வருகிறது. அதாவது ஆண்டு ஒன்றுக்கு 38.40 லட்சம் மெட்ரிக் டன் அரிசியை வழங்கி வருகிறது. மத்திய அரசு ஆண்டு ஒன்றுக்கு 36.78 லட்சம் மெட்ரிக் டன் அரிசியை வழங்கினாலும், மீதமுள்ள 1.62 லட்சம் மெட்ரிக் டன் வெளிச் சந்தையிலிருந்து தான் வாங்க வேண்டும். எனவே, மத்திய அரசு தகுதி உள்ள நபர்கள் என வரையறுத்துள்ளவர்களுக்கு ஒரு கிலோ அரிசியை 3 ரூபாய் என்ற வீதத்திலும், ஏனையோருக்கு ஒரு கிலோ அரிசியை 8 ரூபாய் 30 காசு என்ற வீதத்திலும் வழங்கினாலும், தமிழகத்திற்கான நிதிச் சுமை குறையப் போவதில்லை.
2010 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை மாதம் ஒன்றுக்கு 59,780 கிலோ லிட்டர் மண்ணெண்ணெயை வழங்கி வந்த மத்திய அரசு, அதனை படிப்படியாக குறைத்து, தற்போது 29,060 கிலோ லிட்டர் மண்ணெண்ணெயை மட்டுமே வழங்கி வருகிறது. இதே போன்று தான் சட்டத்தில் வழிவகை செய்யாவிட்டால், அரிசியின் அளவை குறைப்பதோடு மட்டுமல்லாமல், விலையையும் மத்திய அரசு உயர்த்திக் கொண்டே செல்லும்.
இதன் மூலம், கொள்முதல் விலைக்கு அரிசியை பெறக் கூடிய நிலைமை மாநில அரசுக்கு ஏற்படும். இப்படிப்பட்ட ஒரு சட்டத்தை ஆதரித்ததன் மூலம் மிகப் பெரிய துரோகத்தை கருணாநிதி புரிந்திருக்கிறார்.
மாநிலத்தின் உரிமையைப் பறிக்கக்கூடிய ஷரத்துகள் உள்ள இந்தச் சட்டத்தை ஆதரித்துவிட்டு, காவேரி, கச்சத்தீவு உள்பட பல்வேறு பிரச்சனைகளில் மாநிலத்தின் உரிமைகளை பறிகொடுத்துவிட்டு, ‘‘மாநில சுயாட்சி’’ என்ற வார்த்தைக்கு உயிர் கொடுத்ததே தி.மு.கழக அரசு தான் என்று கருணாநிதி கூறியிருப்பது கேலிக் கூத்தானது, நகைப்புக்குரியது, எள்ளி நகையாடத் தக்கது.
கடைசியாக கருணாநிதி தனது அறிக்கையில், ‘‘அ.தி.மு.க. சார்பில் இந்தச் சட்டத்தை ஏற்கவில்லை என்றால், நாடாளுமன்றத்தில் இந்தச் சட்டம் குரல் வாக்கெடுப்பிற்கு விடப்பட்ட போது, சட்டத்தை ஏற்கவில்லை என்று கூறி வெளிநடப்பு செய்திருக்கலாமே? ஏன் செய்யவில்லை?’’ என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை, நான் கேட்டுக் கொண்ட திருத்தங்கள் எல்லாவற்றையும் மேற்கொண்டால் தான் இந்தச் சட்டத்தினை ஆதரிப்பது என்பதும், இல்லையெனில் எதிர்ப்பது என்பதும் தான் நிலைப்பாடு. எனவே, இந்தச் சட்டம் குரல் வாக்கெடுப்பிற்கு விடப்பட்ட போது, ‘‘இல்லை’’ என்று கூறி சட்டத்தினை எதிர்த்து குரல் கொடுத்தவர்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் என்பதை கருணாநிதிக்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
அதே சமயத்தில், 26.8.2013 நாளிட்ட முரசொலியில் ‘‘மத்திய அரசே 14.90 லட்சம் டன் அரிசிக்கு விலை நிர்ணயம் செய்வது என்பதை திராவிட முன்னேற்றக் கழகம் ஏற்றுக் கொள்ளாது’’ என்று அறிவித்துவிட்டு, அதற்கான திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வராத சூழ்நிலையில், தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழகத்திற்கு எதிரான சட்டத்திற்கு வாக்களிக்கச் செய்த கருணாநிதியின் செயல் இரட்டை வேடமே என்பதையும், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை ஆதரித்தது தன்னலத்திற்காகவே என்பதையும் அறிவார்ந்த தமிழக மக்கள் எளிதில் புரிந்து கொள்வார்கள்.
நான் பாரதப் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ள அனைத்துத் திருத்தங்களையும் மத்திய அரசு மேற்கொள்ளாத வரையில், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் தமிழகத்திற்கு பாதகமான ஒன்றாகவே அமையும்.
எனவே, இந்தப் பிரச்சனையில் இரட்டை வேடம் போடுவது யார்? தமிழகத்திற்கு பாதகமான, நஷ்டத்தை ஏற்படுத்தக் கூடிய தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தினை ஆதரித்ததால் யாருக்கு லாபம்? என்பதையெல்லாம் தமிழக மக்கள் சீர்தூக்கிப் பார்த்து அதற்கு விடையளிக்கும் நாள் விரைவில் வரவிருக்கிறது என்பதை கருணாநிதிக்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன்-DINAVIDIYAL!