HAPPY PONGAL WISHES

WELCOME TO DINAVIDIYAL...fast online tamil news network...

Monday, 9 September 2013

சிரியா மீது மூன்று நாட்களுக்கு தீவிர தாக்குதல் நடத்த "பென்டகன்' திட்டம்

வாஷிங்டன் :சிரியா நாட்டின் மீது, மூன்று நாட்கள், தீவிர தாக்குதலை நடத்த, அமெரிக்க ராணுவ தலைமையகமான, "பென்டகன்' திட்டமிட்டுள்ளது.

                  சிரியா நாட்டில், அதிபர் பஷர் -அல்- ஆசாத் ஆட்சி நடக்கிறது. பல ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள அவரை, பதவி விலகும்படி, எதிர்க்கட்சியினர், இரண்டு ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.
அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிளர்ச்சியாளர்கள், ராணுவம் மூலம் ஒடுக்கப்பட்டு வருகின்றனர். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளும், ஆசாத்தை பதவி விலகும்படி வலியுறுத்தின. ஆனால், ஆசாத் மறுத்து விட்டதால், கிளர்ச்சியாளர்களுக்கு, இந்த நாடுகள் ஆயுத வினியோகம் செய்து வருகின்றன.இதனால், சிரியாவில் தொடர்ந்து சண்டை நடக்கிறது. இரண்டு ஆண்டுகளாக தொடரும் இந்த சண்டையில், 1 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்து உள்ளனர்; 7 லட்சம் பேர், அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர்.

               ரசாயன ஆயுதம்:சிரியா நாட்டுக்கு ரஷ்யா, சீனா, ஈரான், வடகொரியா போன்ற நாடுகள், ஆதரவளித்து வருகின்றன. சிரியா ராணுவத்துக்கு, ரஷ்யா, நவீன ஆயுதங்களை வினியோகம் செய்து வருகின்றன. இதனால், சிரியாவுக்கு எதிராக, ஐ.நா., பாதுகாப்பு சபையில் ஒருமனதாக தீர்மானம் கொண்டு வர இயலவில்லை.கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக, சிரியா ராணுவம், கடந்த, 21ம் தேதி, ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதில், 1,300 பேர் கொல்லப்பட்டனர்.ரசாயன குண்டு வீச்சில், நச்சு புகை பரவி, 1,300 பேர் கொல்லப்பட்டதாக கூறும் இடத்தை, ஐ.நா., பார்வையாளர்கள் ஆய்வு செய்து, தடயங்களை சேகரித்துள்ளனர். இன்னும் இது தொடர்பான அறிக்கை வெளியிடப்படவில்லை.சர்வதேச விதிகளை மீறி, ரசாயன ஆயுதங்களை பயன்படுத்திய சிரியா மீது, ராணுவ தாக்குதலை நடத்த, அமெரிக்கா திட்டமிட்டு உள்ளது."சிரியா மீது நடத்தப்படும் தாக்குதல், 60 நாட்களுக்குள் முடிக்கப்பட வேண்டும். அமெரிக்க வீரர்களின் காலடி அந்நாட்டில் படக்கூடாது' என, அமெரிக்க செனட் குழு தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.ரஷ்யாவில் நடந்த, "ஜி 20' உச்சி மாநாட்டில், ""சிரியா மீதான தாக்குதல் தவிர்க்க முடியாது,'' என, ஒபாமா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.



               72 மணி நேர தாக்குதல்:இதனால், சிரியா மீதான போர் உறுதியாகி விட்டது. இதையடுத்து, தாக்குதலுக்குரிய திட்டங்களை, அமெரிக்க தலைமையகமான பென்டகன் தயாரித்து வருகிறது.இது குறித்து, அமெரிக்க ராணுவ அதிகாரிகள் கூறியதாவது:சிரியா மீதான யுத்தம் துவங்கியதும், மூன்று நாட்களுக்கு தீவிர தாக்குதல் நடத்தப்படும். முதல் கட்டமாக விமானம் மூலம் குண்டுகள் போடப்படும். இரண்டாவது கட்டமாக, மத்திய தரைக்கடல் பகுதியில் முகாமிட்டுள்ள ஐந்து, அமெரிக்க போர்க் கப்பல்கள் மூலம், ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்படும்.சிரியாவில், 50 இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளோம். தேவைக்கேற்ப இந்த இலக்கு கூடவோ, குறையவோ செய்யலாம். 72 மணி நேர அதிரடி தாக்குதலில், சிரியா படைகள் ஒடுக்கப்படும். எனவே, விமானப் படைகளை குறைந்த அளவில் பயன்படுத்த ஆலோசித்து வருகிறோம்.இவ்வாறு ராணுவ அதிகாரிகள் கூறினர்.
-DINAVIDIYAL!