தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பதவியில் இருந்து வைகை செல்வன் நீக்கப்பட்டார். அவரது பொறுப்பு அமைச்சர் பழனியப்பனுக்கு கூடுதலாக வழங்கப்பட்டு இருக்கிறது.
சென்னை,
அருப்புக்கோட்டை தொகுதி எம்.எல்.ஏ.வான வைகை செல்வன் கடந்த பிப்ரவரி மாதம் அமைச்சராக பொறுப்பு ஏற்றார்.
அவர் பள்ளிக்கல்வி, தொல்லியல், விளையாட்டுக்கள் மற்றும் இளைஞர் நலன், தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ்பண்பாடு ஆகிய இலாகாக்களின் பொறுப்பில் இருந்து வந்தார்.
நீக்கம்
நேற்று அமைச்சர் வைகை செல்வன் அமைச்சர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
அவரது பொறுப்பை, உயர்கல்வித்துறை அமைச்சரான பி.பழனியப்பன் கூடுதலாக கவனிப்பார் என்று, கவர்னர் மாளிகையில் இருந்து அறிவிப்பு வெளியானது.
கவர்னர் அறிவிப்பு
இதுகுறித்து கவர்னர் மாளிகை செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–
முதல்–அமைச்சரின் பரிந்துரையின் பேரில், பள்ளிக்கூட கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன், தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ்பண்பாடு அமைச்சர் பொறுப்பில் இருக்கும் வைகைச்செல்வன் அமைச்சரவையில் இருந்து நீக்கப்படுகிறார்.
மேலும், முதல்–அமைச்சர் பரிந்துரையின் பேரில், தொழில் நுட்ப கல்வி உள்பட உயர்கல்வி, மின்னணுவியல், அறிவியல், தொழில்நுட்பவியல் அமைச்சராக இருக்கும் பி.பழனியப்பன் இதுவரை வைகைச்செல்வன் வகித்து வந்த பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார்.
இவ்வாறு கவர்னர் மாளிகை செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
ஆசிரியர் தினவிழாவில்
நேற்று ஆசிரியர் தினத்தையொட்டி மாலை 4 மணிக்கு சேத்துப்பட்டு எம்.சி.சி. மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த ஆசிரியர் தின விழாவில் வைகைச்செல்வன் கலந்து கொண்டு சிறந்த ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கி பேருரையாற்றுவார் என்று அழைப்பிதழ் அச்சிடப்பட்டு, விழாவும் தொடங்க இருந்தது.
அந்த விழாவில் கலந்து கொள்ள உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் வந்தவுடனேயே விழாவில் கலந்துகொண்டவர்களுக்கு ஓரளவுக்கு ‘அரசல் புரசலாக’ அவரது பதவி பறிப்பு பற்றி புரிந்தது. பின்னர் அந்த விழாவில் அமைச்சர் பழனியப்பன் கலந்து கொண்டார். அப்போது அமைச்சர் வைகைச் செல்வன் நீக்கம் ஊர்ஜிதம் ஆனது.
அதேநேரத்தில் கவர்னர் மாளிகையில் இருந்தும் அமைச்சரவையில் இருந்தும் அமைச்சரவை மாற்றம் பற்றிய அறிவிப்பு வெளிவந்தது.
கட்சிப்பணியில் இருந்தும் நீக்கம்
அதன்பிறகு சில நொடிகளில் அ.தி.மு.க. தலைமைக் கழக அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்பில் அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்–அமைச்சருமான ஜெயலலிதா கூறியிருந்ததாவது:–
‘‘அ.தி.மு.க., இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை செயலாளர் பொறுப்பில் இருக்கும் வைகைச்செல்வன் எம்.எல்.ஏ. (அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதி) இன்று முதல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.’’
இவ்வாறு முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பில் கூறி இருந்தார்.
10–வது முறையாக மாற்றம்
முதல்–அமைச்சர் ஜெயலலிதா கடந்த ஜூன் மாதம் 17–ந் தேதி தமிழக அமைச்சரவையில் 9–வது முறையாக மாற்றம் செய்தார்.
அப்போது, சி.தா.செல்லப்பாண்டியன், முகமது ஜான் ஆகியோர் அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு சண்முகநாதன், அப்துல் ரகீம் ஆகியோர் புதிய அமைச்சர்களாக அறிவிக்கப்பட்டனர்.
நேற்று, 10–வது முறையாக முதல்–அமைச்சர் ஜெயலலிதா அமைச்சரவையில் மாற்றம் செய்துள்ளார்.
தற்போது முதல்–அமைச்சர் ஜெயலலிதா தலைமையில் 32 அமைச்சர்கள் அமைச்சரவையில் இருக்கிறார்க-DINAVIDIYAL!