–
புதிய அகல ரெயில் பாதையில் விருதுநகர்–காரைக்குடி இடையேயான பயணிகள் ரெயில் சேவையை மாணிக்கம் தாகூர் எம்.பி. இன்று தொடங்கி வைத்தார்.
விருதுநகர்–மானா மதுரை இடையே சமீபத்தில் அகல ரெயில் பாதை அமைக்கப்பட்டு அதில் ரெயில்கள் இயக்கம் தொடங்கி உள்ளது. புதுச்சேரி–கன்னியாகுமரி வாராந்திர ரெயில் மட்டுமே இந்த
பாதையில் இயக்கப்பட்டு வருகிறது.
காரைக்குடி–மானா மதுரை இடையே இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரெயிலை விருதுநகர் வரை நீட்டித்து இயக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதனை ஏற்ற தென்னக ரெயில்வே புதிய ரெயில் சேவையை இன்று (சனிக்கிழமை) தொடங்கும் என அறிவித்தது.
அதன்படி இந்த ரெயில் சேவையின் தொடக்க விழா விருதுநகர் ரெயில் நிலையத்தில் இன்று காலை நடைபெற்றது. மதுரை கோட்ட மேலாளர் ரஸ்தோகி தலைமை தாங்கினார். மாணிக்கம்தாகூர் எம்.பி. சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று ரெயில் சேவையை தொடங்கி வைத்தார். விரைவில் மானாமதுரை–விருதுநகர் வழிப்பாதையில் சென்னை செல்லும் ரெயில்கள் இயக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
கூடுதல் கோட்ட மேலாளர் அஜித்குமார், முதுநிலை வர்த்தக மேலாளர் கோவிந்தராஜ் ரெயில்வே கோட்ட பாதுகாப்பு ஆணையாளர்கள் ராமலிங்கம், செல்வராஜ், முதுநிலை மக்கள் தொடர்பு அலுவலர் வேணுகோபால் மற்றும் பலர் விழாவில் கலந்து கொண்டனர்.
விருதுநகரில் இருந்து தினமும் காலை 6 மணிக்கு புறப்படும் ரெயில், 7.40 மணிக்கு மானாமதுரை சென்றடைகிறது. அங்கிருந்து 7.50 மணிக்கு புறப்பட்டு காலை 9.35 மணிக்கு காரைக்குடியை சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் காரைக்குடியில் இருந்து தினமும் மாலை 6.15 மணிக்கு புறப்படும் ரெயில் இரவு 7.35 மணிக்கு மானாமதுரைக்கு வருகிறது. அங்கிருந்து 7.45 மணிக்கு புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு விருதுநகரை வந்தடைகிறது.
அதேநேரம் சனிக்கிழமை காரைக்குடியில் இருந்தும், ஞாயிற்றுக்கிழமை விருதுநகரில் இருந்தும் இந்த ரெயில் இயக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் விருதுநகரில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் ரெயிலை, 6.30 மணிக்கு புறப்படுமாறு மாற்றி அமைத்தால், சென்னை–நெல்லை இடையே இயக்கப்படும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு இணைப்பு ரெயிலாக இருக்கும் என கோட்ட மேலாளர் ரஸ்தோகியிடம் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதற்கு பதில் அளித்த அவர் தற்போது 75 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயில் இயக்கப்படுகிறது. இன்றும் ஒரு மாதத்தில் இந்த வேகம் 100 கிலோமீட்டர் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. அப்போது புறப்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்படும் என்றார். மேலும் விருதுநகர் ரெயில் நிலையத்தில் விசாரணை அலுவலகம் முறையாக செயல்படவும், கூடுதல் பணியாளர்கள் நியமித்து அதிக அளவு டிக்கெட் கவுண்டர் திறக்கவும் பயணிகள் கோரிக்கை விடுத்தனர்-DINAVIDIYAL!