HAPPY PONGAL WISHES

WELCOME TO DINAVIDIYAL...fast online tamil news network...

Monday, 9 September 2013

மனைவி பெயரில் சொத்துக்களை வாங்கி குவிக்கும் மத்திய அமைச்சர்கள்

புதுடில்லி :

             மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அனைத்து அமைச்சர்களின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளது. ஆனால் சிதம்பரம், சரத்பவார், வீரப்ப மொய்லி ஆகிய முக்கிய அமைச்சர்கள் தங்கள் மனைவிகளின் பெயர்களில்
அதிகளவில் சொத்துக்களை வாங்கி குவித்து வருகின்றனர்.

அமைச்சர்கள் பட்டியல் :

             மத்திய அமைச்சர்கள் தங்களின் சொத்து விபரங்கள் மற்றும் தாங்கள் வகிக்கும் பொறுப்புக்களின் விபரங்கள் குறித்து ஒவ்வொரு ஆண்டும் பிரதமரிடம் அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும். ஆனால் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 76 உறுப்பினர்களில் 19 பேர் மட்டுமே தங்களின் 2012-2013ம் ஆண்டு நிதிநிலை விபரங்களை அளித்துள்ளனர். குறைந்தபட்சம் கடந்த 6 மாத காலங்களின் விபரங்களையாவது சமர்ப்பிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டதால் இவர்கள் தங்களின் சொத்து விபரங்களை தெரிவித்துள்ளனர். மத்திய அமைச்சர்கள் அந்தோனி, சிதம்பரம், பவார், மொய்லி, குமாரி சில்ஜா, சுஷில்குமார் ஷிண்டே, ஆனந்த் சர்மா, ஜெய்ராம் ரமேஷ், ஆஸ்கார் பெர்ணான்டஸ் மற்றும் தில்சா படேல் ஆகி‌யோர் மட்டுமே தற்போது சொத்து விபரங்களை அளித்துள்ளனர்.





சொத்து விபரம் :

                 நிதியமைச்சர் சிதம்பரத்தின் சொத்து மதிப்பு ரூ.11.96 கோடியில் இருந்து ரூ.12.70 கோடியாக அதிகரித்துள்ளது. அவரது மனைவியின் சொத்து மதிப்பு ரூ.17.79 கோடியில் இருந்து ரூ.19.48 கோடியாக அதிகரித்துள்ளது. இதே போன்று சிதம்பரத்தின் குடும்ப சொத்து மதிப்பும் உயர்ந்துள்ளது. தேசியவாத காங்கிரஸ் தலைவரும் வேளாண் அமைச்சருமான சரத்பவாரின் மொத்து மதிப்ப ரூ.7.86 கோடியில் இருந்து ரூ.8.75 கோடியாக உயர்ந்துள்ளது. அவரது மனைவியின் சொத்து மதிப்பு ரூ.4.70 கோடியில் இருந்து ரூ.13.46 கோடியாக அதிகரித்துள்ளது. இவரது குடும்ப சொத்து மதிப்பு ரூ.3.58 கோடியில் இருந்து ரூ.5.81 கோடியாக அதிகரித்துள்ளது. பெட்ரோலியத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லியை விட அவரது மனைவி பெயரிலேயே அதிக அளவில் சொத்துக்கள் உள்ளது. மொய்லியின் மனைவியின் சொத்து மதிப்பு ரூ.3.08 கோடியில் இருந்து ரூ.3.10 கோடியாக உயர்ந்துள்ளது. ஆனால் மொய்லி பெயரில் ரூ.25.55 லட்சத்திற்கு மட்டுமே சொத்து உள்ளது.

குமாரி சில்ஜா குர்கானில் இரண்டு பிளாட்கள் வாங்கியதன் மூலம் அவரது சொத்து மதிப்பு ரூ.19.54 கோடியில் இருந்து ரூ.29.56 கோடியாக அதிகரித்துள்ளது. வணிகத்துறை அமைச்சர் சர்மாவின் சொத்து ரூ.4.02 கோடியில் இருந்து ரூ.4.29 கோடியாக உயர்ந்துள்ளது. கிராமப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷின் சொத்து மதிப்பு ரூ.3.13 கோடியில் இருந்து ரூ.4.78 கோடியாக உயர்ந்துள்ளது. ஆனால் அவரது மனைவி பெயரில் உள்ள சொத்துக்கள் ரூ.11 லட்சத்தில் இருந்த ரூ.10 லட்சமாக குறைந்துள்ளது. உள்துறை அமைச்சர் ஷிண்டேவின் சொத்துக்கள் ரூ.7.42 கோடியில் இருந்து ரூ.10.83 கோடியாகவும், இவரது மனைவியின் சொத்துக்கள் ரூ.4.53 கோடியில் இருந்து ரூ.5.77 கோடியாகவும் உயர்ந்துள்ளது. -DINAVIDIYAL!