HAPPY PONGAL WISHES

WELCOME TO DINAVIDIYAL...fast online tamil news network...

Thursday, 5 September 2013

கர்நாடக அரசு திட்டங்களுக்கு அனுமதி கூடாது

சென்னை, செப்.4-
‘அர்காவதி ஆற்றை சீரமைக்கும் திட்டம், ஹேமாவதி கால்வாய் நவீனப்படுத்தும் திட்டம் ஆகிய எந்த ஒரு திட்டத்தையும் கர்நாடக அரசு மேற்கொள்ள அனுமதிக்கக்கூடாது’ என்று முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதி உள்ள ஒரு கடிதத்தில் வலியுறுத்தி இருக்கிறார்.
காவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரி ஒழுங்குமுறை குழுவையும் உடனடியாக அமைக்க வேண்டும் என்றும் பிரதமரை முதலமைச்சர் ஜெயலலிதா மீண்டும் வலியுறுத்தி இருக்கிறார்
.
இதுசம்பந்தமாக முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இன்று எழுதியுள்ள ஒரு கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
‘அர்காவதி ஆற்றை சீரமைக்கவும், ஹேமாவதி கால்வாயை நவீனப் படுத்தவும் ஆர்வம் தெரிவிக்குமாறு நிறுவனங்களை கேட்டுக்கொண்டு பத்திரிகைகளில் விளம்பரங்களை கர்நாடக அரசின் ஒரு நிறுவனமான காவிரி நீராவரி நிஜாமா லிமிடெட் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அர்காவதி ஆற்றை சீரமைக்கவும், ஹேமாவதி இடது கரை கால்வாய், வலது கரை கால்வாய் மற்றும் வலதுகரை உயர் மட்ட கால்வாயை திருத்தி அமைத்து சீரமைக்கவும் இந்த ஆர்வம் தெரிவிக்கும் விளம்பரம். தேசீய ஆறுகள் பராமரிப்பு திட்டம் மற்றும் தேசீய வரப்பு (வாட்டர் ஷெட்) மேம்பாடு திட்டத்தின் கீழ் அர்காவதி ஆற்றை சீரமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை ஒன்றை தயாரிப்பதற்காகவே இந்த ஆர்வம் தெரிவிப்பு கோரப்பட்டுள்ளது. இதேபோல தீவிர பாசன ஆதாய திட்டத்தின் கீழ் உதவி கோருவதற்காக ஹேமாவதி கால்வாய்கள் நவீனப் படுத்தும் திட்டம்.
அர்காவதி ஆறு சீரமைப்பு திட்டம்; ஹேமாவதி கால்வாய்களை திருத்தி அமைத்து நவீனப்படுத்தும் திட்டம்- ஆகியவை புதிய திட்டங்களாகும். இத்திட்டங்கள்- காவிரி தாவா நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையில் பரிசீலிக்கப்படவில்லை. எந்த நோக்கத் திற்காக இவ்விரு திட்டங்கள் என்பது தெரியவில்லை.
அதிகப்படியான நீரை
எடுத்துக் கொள்ளும்…
மேலும், ஹேமாவதி திட்டத்தை திருத்தி அமைப்பதால்… அதன் காரண மாக கர்நாடக அரசு அதிகப்படியான நீரை எடுத்துக் கொள்ளும். காவிரி தாவா நடுவர் மன்றத்தின் இறுதி ஆணைப்படி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள அளவைக் காட்டிலும் மிஞ்சி ஆயக்கட்டை கர்நாடக அரசு விஸ்தரித்துக் கொள்ளும். இதன் மூலம் ஆற்றின் இயற்கையான ஓட்டம் பாதிக்கும். அதனைத் தொடர்ந்து தமிழ் நாட்டில் பாசன நிலங்கள் மிகவும் கடுமையாகப் பாதிக்கும்.
கர்நாடக அரசால் உத்தேசிக்கப்பட்டு உள்ள இந்தத் திட்டங்கள், காவிரி தாவா நடுவர் மன்றத்தின் இறுதி ஆணைக்கு எதிரானதாகும். காவிரி தாவா நடுவர் மன்றத்தின் இறுதி ஆணை அமுல் படுத்தப்படுவதை கண்காணிக்க தற்காலிக குழு ஒன்றை சுப்ரீம் கோர்ட் அமைத்து உள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள்.
காவிரி மேலாண்மை வாரியம்
அமையும் வரை…
காவிரி தாவா நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையை சிறிதும் மதிக்காமல் காவிரிப் படுகையில் நவீனமயமாக்கும் புதிய திட்டங்களை மேற்கொள்ளும் கர்நாடக அரசின் போக்கு அதிர்ச்சியூட்டுவதாக உள்ளது. இப்படி கர்நாடக அரசு செயல்படக்கூடாது. ஆகவே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரையில்… காவிரிப் படுகையில் எந்த ஒரு திட்டத்தையும், காவிரி தாவா நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையில் பரிசீலிக்கப்படாத எந்த ஒரு புதிய திட்டங்களையும் மேற்கொள்ள கர்நாடக அரசை அனுமதிக்கக்கூடாது.
திரும்ப திரும்ப கோரியும்
நடவடிக்கை இல்லை
மேலும் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் கட்டுப்பாட்டு (ஒழுங்குமுறை) குழு ஆகியவற்றை நடுவர் மன்றத்தின் இறுதி ஆணைகளை சிறப்பாக- திறம்பட நடத்திடும் விதத்தில் அமைத்திட வேண்டும் என்று திரும்பத் திரும்ப நான் விடுத்திருக்கும் கோரிக்கைகள்- செயல்படுத்தப் படவில்லை.
இந்நிலையில் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணை கர்நாடக அரசால் மீறப்படாமல் இருக்க காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என்று நான் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்.
இத்தகைய சூழ்நிலைகளில், இது விஷயத்தில் நீங்கள் தலையிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
விளம்பரத்தை
நிறுத்தி வையுங்கள்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரையில்…. காவிரிப் படுகையில் எந்த ஒரு திட்டத்தையும் மேற்கொள்ளக்கூடாது என்று கர்நாடக அரசுக்கும், அதன் காவிரி நீராவரி நிஜாமா லிமிடெட் நிறுவனத்துக்கும் உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
மேலும், இவ்விரு திட்டங்களுக்கு மான விருப்பம் வெளியிடுவதை நிறுத்தி வைக்கு மாறு காவிரி நீராவரி நிஜாமா லிமிடெட் நிறுவனத்துக்கு உரிய விதத்தில் உத்தரவிட வேண்டும் என்று நீங்கள் அறிவுறுத்த வேண்டும்.
அல்லது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை காவிரி நீர்ப் படுகையில் கர்நாடக அரசின் திட்டங் களுக்கான விருப்பம் வெளியிடும் எதுவும் விளம்பரம் செய்யக்கூடாது என்றும் அறிவுறுத்த வேண்டும். அதே நேரம் காவிரி மேலாண்மை வாரியத்தை யும், காவிரி தண்ணீர் கட்டுப் பாட்டுக் குழுவையும் உடனடியாக அமைத்திட வேண்டும் என்று நான் உங்களை கேட்டுக் கொள்கிறேன்.
இது விஷயத்தில் நீங்கள் உடனடியாக தலையிட்டு தக்க நடவடிக்கை எடுக்க என் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்தக் கடிதத்தில் ஜெயலலிதா எழுதியுள்ளார்.-DINAVIDIYAL!