HAPPY PONGAL WISHES

WELCOME TO DINAVIDIYAL...fast online tamil news network...

Monday, 16 December 2013

பா.ஜ.,வுக்கு வாய்ப்பு தாருங்கள்: நரேந்திர மோடி வேண்டுகோள்

 ''காங்கிரசுக்கு ஆட்சி புரிய வாய்ப்பு வழங்கிய நீங்கள், நிறைய அனுபவித்து விட்டீர்கள். எங்களுக்கு, இந்த முறை வாய்ப்பு தாருங்கள்; உங்கள் கனவுகள் அனைத்தையும் நிறைவேற்றுகிறோம்,'' என, பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி, உத்தரகண்ட் மக்களை கேட்டுக் கொண்டார்.

லோக்சபா தேர்தலுக்கான, பா.ஜ., பிரசார கூட்டம், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, முதல்வர், விஜய் பகுகுணா தலைமையிலான, உத்தரகண்ட் மாநிலத்தின் டேராடூன் அருகே நேற்று நடந்தது.

அதில், பா.ஜ., பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி பேசியதாவது:இந்த மாநிலத்தில், செழிப்பான ஆறுகள் ஓடுகின்றன. அபரிமிதமான தண்ணீர் வளம் உள்ளது. எனினும், இந்த மாநிலமும், நாடும் மின் பற்றாக்குறையால் இருளில் மூழ்கியுள்ளன. இங்குள்ள நீரை பயன்படுத்தி, நீர் மின்சாரம் எடுக்க, மாநில, காங்கிரஸ் அரசு முயற்சிகள் மேற்கொள்ளவில்லை.அது போல், மலைகள், பள்ளத்தாக்குகள் நிறைந்த, இயற்கை வளம் நிறைந்த இந்த மாநிலத்தில், சுற்றுலாவுக்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. சுற்றுலாவை மேம்படுத்த, மாநில அரசு சரியான முயற்சிகள் மேற்கொள்ளவில்லை.

இந்த மாநில இளைஞர்கள், திறமையானவர்கள். அவர்களை பயன்படுத்திக் கொள்ளவும், வேலைவாய்ப்புகளை வழங்கவும், காங்கிரஸ் அரசு தயாராக இல்லை.ஏழைகளை ஏழைகளாகவே வைத்திருக்க இந்த அரசு விரும்புகிறது.இத்தனை காலம், காங்கிரசுக்கு ஆள, மத்தியில் வாய்ப்பு கொடுத்தீர்கள். எங்களுக்கு ஒருமுறை வாய்ப்பு தாருங்கள்; உங்கள் கனவுகள் அனைத்தையும் நிறைவேற்றுகிறோம்.மத்தியில் ஆளும், காங்கிரஸ் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் தவறான திட்டங்களால், நிறைய பாதிப்பை சந்தித்து விட்டீர்கள். எங்களை நம்புங்கள்; பா.ஜ..,வுக்கு வாய்ப்பு தாருங்கள்.இவ்வாறு, நரேந்திர மோடி, பிரசார கூட்டத்தில் பேசினார். -DINAVIDIYAL!